பக்கம் எண் :

22கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

"குருகுலத்தில் தமிழரைச் சமத்துவமாக நடத்த மகாத்மாவுடன் பேசியும் ஒரு முடிவும் ஏற்படாமை யால், மலேயா நாட்டில் திரட்டப் பட்ட பொருளை நன்கொடையாளரிடமே திருப்பிக் கொடுத்து விட வேண்டுமென்று வை.சு.சண்முகம் செட்டியார், திரு.வி.க., டாக்டர் ப. வரதராசுலு நாயுடு, சொ. முருகப்பா, ராய. சொ. சுரேந்திரநாத் ஆர்யா, கே.எஸ். சுந்தரம் பிள்ளை முதலியோர் 24.3.1925-இல் சென்னையில் கூடி முடிவு செய்தனர்."

"நீலாவதி வாழ்க்கை வரலாறு" என்னும் நூலில், ஆசிரியர் எஸ்.ஏ.கே.கே. இராசு அவர்கள் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்.

"நீலாவதி இராம. சுப்பிரமணியன் திருச்செந்தூரிலிருந்து நேரே சேரன்மாதேவி சென்று 'குருகுலம்' பார்க்கச் சென்றார்கள். மேற்படி குருகுலத்துக்கு மலேயா அன்பர்கள் முக்கியமாக வயி.சு. சண்முகம் ஆகியோர் உதவி பெற்று வீ.வீ.எஸ். ஐயரால் நிறுவப்பட்டு, மகாதேவ ஐயரால் நிர்வாகம் செய்யப்பட்டு, வந்தது. காந்திய முறையில் ஆரம்பிக்கப்பட்ட அங்கு, மாணவர் களை இரண்டாகப் பிரித்துப் பிராமண மாணவர்களுக்குத் தனியறையிலும் மற்றவர் களுக்குத் தனியறையிலும் உணவு பரிமாறப்பட்டது கண்டு, சகோதரியார் மனம் வெதும்பிப் போனார்."

வ.வே.சு. ஐயரின் சாதிப்பித்தையறிந்த பாரதியார் மனம் நொந்து,

"தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சைக் கலந்தபின்
அது தெள்ளிய தேனாமோ? நன்னெஞ்சே"

என்ற பாடலைப் பாடினார் என வை.சு.ச. அடிக்கடி கூறுவார் என அவர்தம் மகள் பார்வதி நடராசன் சொல்கிறார்.

முத்தமிழ் நிலையம் முகிழ்த்தது

பாவேந்தர் பாரதிதாசன் மூத்தமகள் சரசுவதிக்குத் திருமண ஏற்பாடாகி விட்டது. திருமணச் செலவுக்குப் பணம் வேண்டுமே! பாவேந்தர் பணத்தையா தேடி வைத்திருந்தார்? மஞ்சுளாபாய் அம்மையாரிடம் தம் குடும்பச் சூழ்நிலையை விளக்கிக் கூறினார். அம்மையார், தம் கணவர் வயி.சு. சண்முகனாரிடம் கூறி, அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறி வந்தார்.

திரும்பி வந்த அம்மையார், தம் கணவரிடம் பாவேந்தர் நிலைமையை விளக்கிக் கூறினார். சிந்தித்து ஒரு முடிவெடுத் தார்.