பக்கம் எண் :

34கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

கிடைத்தற்கரிய உயரிய நூல்கள் சண்முகனாரிடம் இருக்கும். சீவா வரும்பொழுதெல்லாம் தமக்கு வேண்டிய நூல்களை எடுத்துச் செல்வார். ஒரு தடையும் இராது. அந்த அளவிற்கு உறவு வளர்ந்திருந்தது.

அண்ணல் சுப்பிரமணியனார்

புதுக்கோட்டையில் அண்ணல் சுப்பிரமணியனார் என்னும் பெருமகனார் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திருக்குறள் கழகத்தலைவர். குறள் நெறி வாழும் கொள்கையர், அடக்கம் முதலிய பண்புநிறை சான்றோர். கல்வித் தொண்டே கடவுள் தொண்டென ஆற்றி வரும் தொண்டர். 1959 ஆம் ஆண்டு அவருக்கு மணிவிழா வந்தது. நாங்கள் சிலர் கூடி விழாக் கொண்டாட முனைந்தோம்.

ஆர்ப்பாட்டங்களையோ ஆரவாரங்களையோ விளம்பரங் களையோ விரும்பாத இயல்பினராதலின் மறுத்து விட்டார். அப்பொழுது தற்செயலாகச் சண்முகனார் புதுக்கோட்டைக்கு வந்திருந்தார். எங்கள் பேச்சில் கலந்து கொண்டார். அண்ணலார் மறுத்துரைப்பதையும் அறிந்து கொண்டார்.

"நீங்கள் விழா நடத்துங்கள்! வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்! நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லி விட்டு நேரே அண்ணலாரிடம் சென்றார்.

"என்ன நீங்கள் மணிவிழாக் கொண்டாடக் கூடாதென்று சொன்னீர்களாமே? பிள்ளைகள் ஆசைப் படுகிறார்கள். நீங்கள் தடை சொல்லக் கூடாது" என்று சண்முகனார் கூறினார்.

"அதெல்லாம் பெரியவர்களுக்காகச் செய்ய வேண்டியது. நான் சிறியவன்; எனக்கெதற்கு?" என்று அடக்கமாக மறுமொழி தந்தார் அண்ணலார்.

"பெரியவங்களாவது? சின்னவங்களாவது? உங்களைவிடப் பெரியவன் எவனிருக்கிறான்? விழா நடந்து தான் தீரும். நீங்கள் பிள்ளைகள் முயற்சியில் தலையிடக் கூடாது" என்று ஆணை யிட்டது போல் கூறிவிட்டு எழுந்து வந்து விட்டார்.

எங்களிடம் வந்தார். 'நீங்கள் விழாவிற்கு முயற்சி செய்யுங்கள்; நான் சொல்லி விட்டேன்' என்றார். நாங்கள் வெற்றிக் களிப்புடன் விழாக் குழு அமைத்து மிக்க சிறப்புடன் மணி விழா நடத்தி முடித்தோம். அக்குழுவில் சண்முகனாரும் ஒருவராவார்.