மேரி சுப்பிரமணியம் திருமணம் ஈரோட்டிலுள்ள என் நண்பர் சீ.ப. சுப்பிரமணியன் என்பவர் மேரியென்ற பெண்ணை விரும்ப, அப்பெண்ணும் இவரை விரும்ப இருவரும் மனமொத்தவராகி, உடன் போக்காகப் புறப்பட்டுக் காரைக்குடிக்கு என்னிடம் வந்து சேர்ந்தனர். அவர்கள் வீட்டில் எவரும் எதிர்ப்புரை கூறார். எனினும் அச்சம் மீதூரப் புறப்பட்டு வந்து விட்டனர். வந்து. 'எங்கள் வீட்டார் தேடி வருவது உறுதி. அதனால் சில நாள் தலை மறைவாக இருக்க வேண்டும். எங்காவது பாதுகாப்பான இடத்திற் கொண்டு போய் வைத்து விடுங்கள்' என்று வேண்டினர். யாது செய்வதென எனக்கு ஒன்றும் தோன்ற வில்லை. எண்ணிப் பார்த்தேன். சண்முகனார் என் கண்முன் தோன்றினார். 20-4-1956 அன்று விரைந்து அவரிடம் அழைத்துச் சென்றேன். நடந்தவற்றை விளக்கிக் கூறிவிட்டுச் சில நாள் இவர்களை இங்கே தங்க வைக்கலா மென்று கருதுகிறேன் என்று தயங்கித் தயங்கிச் சொன்னேன். 'இதற்கென்ன இவ்வளவு தயக்கம்? பிள்ளைகளை விட்டு விட்டுப் போ; நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று உரிமை யுடன் கூறிவிட்டு, மேசைமேலிருந்த மணியை அழுத்தினார். அவர்தம் பேத்திகள் வந்தனர். அவர்களை நோக்கி, 'பிள்ளையை உள்ளே அழைத்துக் கொண்டு போய் வேண்டியவற்றைக் கவனி' என ஆணையிட்டு விட்டுச் சுப்பிரமணியத்திடம் உரையாடினார். மண மக்களுக்குப் புதிய வீடாகத் தோன்றவில்லை. பழகிய வீடாகவே தோன்றியது. அந்த அளவிற்கு அனைவரும் இவர்களுடன் பழகினர். ஒரு வாரம் கழித்து அவர்களை அழைத்து வரச் சென்றேன். 'என்ன அவசரம்? அதற்குள் ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்?' என்று கடிந்து கொண்டார். திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும், அதற்காக அழைத்துச் செல்கிறேன் - என்று கூறினேன். 'சரி, அப்படியானால் அழைத்துச் செல். ஏதேனும் உதவி தேவையென்றால் உடனே இங்கே வா' என்று கூறினார் 30-4-1956 காரைக்குடியில் திருமணம் பதிவு செய்யப்பட்டது. |