| 36 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
இவ்வளவு நாள் வைத்திருந்தமைக்காகவும் இன்னும் உதவி தேவையென்றால் செய்வதாக மொழிந்தமைக்காகவும் மகிழ்ந்து முறைப்படி நன்றி கூறினேன். உடனே அவர்க்குச் சினம் தோன்றி விட்டது. 'யார் யாருக்கு நன்றி சொல்வது? என் பிள்ளைகள் இங்கிருந்ததற்கா நன்றி? இந்த மாதிரியெல்லாம் பேசாதே' என்று உரத்த குரலில் கூறினார். என் உள்ளம் நெகிழ்ந்து விட்டது. இன்பமாளிகையில் இருக்கும் பொழுது இப்படிக் கூறியிருந்தால் நெகிழ்ந்திருக்க மாட்டேன். இன்ப மாளிகை கைவிட்டுப் போன பின்னர்- ஓட்டுக்குடிலில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது - செல்வ வளம் சுருங்கிவிட்ட பிறகும் இவ்வளவு உரிமையுணர்வுடன் உதவும் மனப்பாங்குடன் மொழிந்த மொழிகள் தாம் என்னை உருக வைத்து விட்டன. 'ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளில் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்' ஆறு போலச் செல்வப் பெருக்கற்ற நிலையிலும் உதவ வேண்டும் என்ற வள்ளன்மையை என்னென்பது? |