| 38 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
உடம்புக்கு நல்லது, இதை உண்ணுங்கள்; இன்னும் உண்ணுங்கள்' என்று வற்புறுத்தி, உண்ணச் செய்வார். அவ்வில்லத்திற்குட் புகுந்தோர் உண்ணாமல் வெளி வருதல் இயலாது. கட்டாயம் உண்டு தான் ஆக வேண்டும். அகம் மலர முகம் மலர, இன்சொற்பேசி, உண்ண வருக என்று அழைப்பது தான் இயல்பு. ஆனால் சண்முகனார் அவ்வழக்கத்திற்கு மாறுபட்டவர். 'சாப்பிடுங்கள்' என்று ஆணைதான் இடுவார். ஆனால் அவ்வாணையில் அன்பும் உரிமையும் உறவும் அளவளாவிக் கிடக்கும். வந்தோர், பரிமாறப்பட்ட உணவின் முன்னர் அமர்வதைத் தவிர, மறுமொழி கூறவே இயலாது. பொதுவாக விருந்தோம்பும் பண்பிலே செட்டிநாடு தனிப்புகழ் பெற்றது. இவரோ அதிலும் ஒரு தனித்தன்மை படைத்தவர். உளம் ஒன்றிய முறையையும் கலந்து கொடுப்பார். செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் நல்வியல்பு கொண்டவர் சண்முகனார். அதிலே இன்பங் கண்டு திளைப்பவர். வருவோர்க்கெல்லாம் விருந்து காந்தியடிகள் இவ்வில்லத்தில் தங்கியிருந்த பொழுது, அவருடன் வந்த பெருமக்களுக்கும் அண்ணலைக் காண வந்த தொண்டர் களுக்கும் நூற்றுக்கணக்கானோர்க்கும் இங்கே தான் விருந்து! பெரியார் வருங்கால் அவர்தம் படை மறவர்க்கும் தொண்டர் களுக்கும் இங்கேதான் விருந்து! பாரதியார் வந்தார். அவரைக் காண நாமக்கல் கவிஞர் வந்தார். பாரதி அன்பர்கள் வந்தனர். அனைவர்க்கும் இங்கே தான் விருந்து! "அவர் (பாரதியார்) தங்கியிருந்த ஜாகைக்குப் போனோம். அங்கே பாரதியாரைப் பார்க்கப் பல பேர் வந்திருந்தார்கள். அத்தனை பேருக்கும் அங்கே விருந்து நடந்தது." என்று நாமக்கல் கவிஞர் 'என் கதை' என்னும் நூலிற் குறிப்பிடுகின்றார். பாரதிதாசன் வருவார். தோழர் சிலரும் உடன் வருவர். பல நாள் தங்குவர். இங்கேதான் விருந்து. பாவேந்தர் மகள் சரசுவதிக்கும் கண்ணப்பருக்கும் திருமண மான புதிதில், இருவரும் கானாடுகாத்தானுக்கு வந்து, இன்ப மாளிகையில் சில நாள் தங்கியிருந்து விட்டு மகிழ்ச்சியோடு திரும்பினர். |