பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்41

னாகச் சென்று, அளவளாவும் பேறு பெற்றுள்ளேன் என்பதை எண்ணும் பொழுது உள்ளம் சிலிர்க்கிறது; பூரிக்கிறது!

1950 ஆம் ஆண்டு முதன்முதலாக இன்பமாளிகைக்குக் குடும்பத் துடன் சென்றேன். அம்மாளிகையைக் கண்டு வியந்து, சிறிது அச்சத்துடன் தயங்கித் தயங்கியே நுழைந்தேன்.

நுழைந்த சில நொடிப் பொழுதில் அச்சமும் தயக்கமும் அகன்றன. செல்வச் செருக்கு அங்கே எள்ளளவுந் தலை காட்ட வில்லை. 'வாங்க தம்பி! வா செல்வி' என்று அன்பொழுக அம்மா வரவேற்றார்கள். 'வாப்பா! வா ஆத்தா' என்று உரிமையுடன் வரவேற்றார் ஐயா. குழந்தையை உடனே வாரி யெடுத்துக் கொண்டு கொஞ்சினார். எழுந்தோடிச் சென்று, அலமாரியைத் திறந்து, ஒரு பொம்மையை எடுத்துக் கொணர்ந்து, குழந்தை கையில் கொடுத்து விளையாடினார்.

இயல்பாக அவர்க்கிருந்த உரத்த குரலைக் கேட்டு அழுத குழந்தை, சிறிது நேரத்தில் அவருடன் விளையாடத் தொடங்கி விட்டது. அப்பொழுது நொடித்திருந்த நேரம். 'இந்தச் சமயத்தில் குழந்தை வந்திருக்கிறதே!' என்று சொல்லி இரங்கினார். விலையு யர்ந்த பொருள்களைக் கொடுக்க இயல வில்லையே என்ற ஏக்கத்தை அச்சொற்கள் புலப்படுத்தின.

நானும் கலைச்செல்வியும் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் என்பதை அறிந்து பெரிதும் மகிழ்ந்தார். அம் மாளிகையில் இருக்கும் பொழுது உறவினர் வீட்டில் இருப்பது போன்ற உணர் வுடன் - ஏன், சொந்த வீட்டில்இருப்பது போன்ற உணர்வுடன்தான் இருந்தோம். அவர்கள் பாய்ச்சிய அன்புப் புனல், அவ்வாறு எண்ணச் செய்தது.

பின்னர், உணவு பரிமாறப்பட்டது. அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்தோம். சரி நிகர் சமானந்தான். நன்கு உண்ணுமாறு வற்புறுத்தப் பட்டோம்.

அங்கு நான் கண்ட புதுமை! விருந்தினர்க்கு இலை விரித்துப் பரிமாறுவதுதானே இயல்பு. இங்கே இலையே காணப்படவில்லை. 'எவர்சில்வர்' தட்டுகளே வரிசையில் அழகு செய்தன. தாம், அயலார் என்ற வேறுபாடு அகலவே இவ்வேற்பாடாம்.

பின்னர், உரையாடத் தொடங்கினோம். என் பாடல்களிற் சில ஐயங்கள், மறுப்புக்கள் எழுப்பினார். சில விளக்கந் தந்தேன்.