6 பாட்டுப் பறவைகளின் புகலிடம் புரவலர் தமிழ் வடமொழிகளில் தேர்ந்த அறிவாளராகிய சுவாமி சிவானந்த சரசுவதி என்னும் சான்றோர், தமிழில் மொழி பெயர்த்துதவிய 'ஞான சூரியன்' என்னும் நூலின் முன்னுரையில் நம் வயி.சு. சண்முகனாரைப் பற்றிய குறிப்பொன்று காணப் படுகிறது. "இதனை (ஞான சூரியனை) எழுதச் செய்து, முதன் முதலாக அதிகப் பொருட் செலவில் அச்சிட்டு வெளியிட்டவர், பொது ஜன உபகாரியும், சுயமரியாதைத் தோழருமாகிய கானாடுகாத்தான் தோழர் வை.சு. சண்முகம் அவர்களாவார்." - பெரியார் சுயமரியாதைப் பிரசார ஸ்தாபனம் குடியரசு வெளியீடாகிய ஞானசூரியனிற் குறிப்பிட்டாற் போல இவர், பொதுவாகப் பலருக்கு உதவும் மனப்பாங்கு படைத்தவ ராகினும் சிறப்பாகக் கவிஞர் பலரைப் புரந்து வந்த வள்ளலும் ஆவார். பாட்டுப் பறவைகளாகிய பாவலர் பலர்க்கும் புகலிடமாக விளங்கினார். பாரதி சந்திப்பு தேசியகவி சி.சுப்பிரமணிய பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், இந்நூலாசிரியர் முடியரசன் மூவரிடமும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். மற்றும் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, நாமக்கல் வே. இராமலிங்கம் பிள்ளை முதலிய கவிஞர்களுக்கும் உதவிகள் செய்துள்ளார். பாரதியார் புதுச்சேரியில் இருந்த பொழுதே சண்முகனாருக்கும் அவருக்கும் கடிதத் தொடர்பு இருந்து வந்தது. அதன் பின்னர் பாரதியார் கடையத்திற்கு வந்து தங்கியிருந்தார். அவரைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தால் உந்தப்பட்ட சண்முகனார் கடையத் திற்குச் சென்றார். |