பக்கம் எண் :

44கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13

அங்கே தேடியலைந்து, வீட்டைக் கண்டுபிடித்து, அவ் வீட்டின் முன்னர் நின்று, 'பாரதியார் இருக்கிறாரா?' என்று குரல் கொடுத்தார் சண்முகனார்.

உள்ளேயிருந்து ஒருவர் வந்தார். செந்நிற மேனியும் முழுதும் மழிக்கப்பட்ட வழுவழுப்பான தலையும் கருத்த தாடிமீசையும் உடையவராக ஒரு முகமதியர் போல அவர் வந்து நின்றார்.

வீடு தவறி வந்து விட்டோமோ என எண்ணிய சண்முகனார், அவரைக் கூர்ந்து நோக்கி, ஒளியுமிழும் விழிகளைக் கண்டு, இவர் பாரதியார்தான் என்று வணக்கம் தெரிவித்தார்.

உள்ளேயிருந்து வந்தவர் சண்முகனாரை நோக்கிக் 'கானாடு காத்தானிலிருந்து வருகிறீர்களா?' என்று வினவினார்.

எப்படித் தெரிந்து கொண்டார் என வியந்த சண்முகனாரின் விழிகளில் நீர் ததும்பி நின்றது. உணர்ச்சி வயப்பட்டமையால் ஒன்றும் பேசவியலாது. 'ஆம்' என்று மட்டும் விடை தந்தார்,

இது பற்றி வயி. சு. சண்முகனாரே கூறுகிறார்.

"1918 ஆம் ஆண்டில் பாரதியார் புதுச்சேரியில் இருந்த பொழுது அவரிடம் கடிதத் தொடர்பு கொண்டேன். 7-2-1919 அன்று மாலை 3 மணிக்குக் கீழக்கடையத்தின் தென்கிழக்கு மூலைக் கோடியில் இருந்த பாழடைந்த ஓர் வீடு தேடிச் சென்று, இங்குதான் பாரதியார் இருக்கிறாரா என்று வினவிய போது உள்ளேயிருந்து நல்ல சிவந்த மேனி மழுங்கச் சிறைத்த வழுவழுப்பான தலை, கூரிய மின்னலிடும் உறுதியான தாடி மீசைகளுடன் அசல் 'முசல்மான்'" வடிவில் பாரதியார் வந்து அமைதியாக நின்றார். ஐயமுற்று மூன்று விநாடி நேரத்தில் அவரின் விரிந்த, சுடரொளி வீசும் கண்களைக் கண்டு, உறுதி பெற்றுக் கை கூப்பி வணங்கினேன்.

- 'எழில்' ஏவிளம்பி - மாசி

அதன் பின்னர் இருவரும் நெருங்கிய தொடர்பு கொண்டு பழகி வந்தனர். இன்று பாரதியாரைப் போற்றிப் புகழ் பாடும் தலைவர் களும் பிறரும் அவரைப் புறக்கணித்து ஒதுக்கி வந்த காலத்தே - பாரதியார் வறுமைக்கு ஆளாகி இடர்ப்பட்ட காலத்தே, அவருக்கு உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் பேணிக் காத்துப் பொன்றாப் புகழ் படைத்த பேரருளாளர் நம் சண்முகனார்.


குறிப்பு: எழில் - முடியரசனாரும், தமிழண்ணலும் இணைந்து நடத்திய இதழ்.