பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்47

வை.சு.ச. இதோ கொடுக்கிறேன் என்று பெட்டியைத் திறந்து ஒரு நூறு ரூபாய் எடுத்து வந்து பாரதியிடம் கொடுத்தார். பாரதி நோட்டை இருபுறமும் திருப்பிப் பார்த்து விட்டு, "இது எனக்குத் தானே?" என்றார்.

"ஏன் சந்தேகம்?" என்றார் வை.சு.ச.

"இல்லை; எனக்குச் சொந்தமான நோட்டை நான் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமை யுண்டல்லவா?" என்றார் பாரதி.

"தாராளமாக, எப்படி வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம்" - இது வை.சு.ச.வின் பதில்.

மீண்டும் பாரதியார் நோட்டைத் திருப்பித் திருப்பிப் பாhர்த்துக் கொண்டே எழுந்து நின்றார். வை.சு.ச.வுக்கு ஒன்றும் புரியவில்லை.

"ஏன், ஏதாவது தேவையானால் வாங்கிவரச் சொல்கிறேன்" என்று அவரும் எழுந்து நின்றார்.

அதற்குள் கண்மூடிக் கண் திறப்பதற்குள் பாரதியார் தம் கைலிருந்த நூறு ரூபாய் நோட்டைச் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டு விட்டார்.

வை.சு.ச.வுக்கு ஒரே வியப்பு. "ஏனைய்யா கிழித்தீர்?" என்று கேட்டாராம்.

"என் நோட்டை நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். உமக்கென்னையா அக்கறை?" என்று சொல்லிக் கொண்டு கலகல வென்று சிரித்தாராம் பாரதி. இந்த நிகழ்ச்சியைச் சொல்லி விட்டு, "மேதைகளான கவிஞர்களின் விசித்திரப் பண்புகளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. புரட்சிக் கவிஞரும் அந்தப் பாரதியாரின் தாசன்தானே? அவருடைய குணத்தில் இவருக்குப் பாதியாவது இருக்கு மல்லவா?" என்றார். இவ்வாறு அவ்வை சண்முகம் எழுதுகிறார்.

வறுமையில் வாடிய பாரதியார், நூறு உரூவாத் தாளைக் கிழித்தெறிந்த நிலையை என்னென்பது? கிறுக்குத்தனமென்பதா? சிறு பிள்ளைத்தனமென்பதா? இவ்வுலக மாந்தருக்கு அப்படித் தான் எண்ணத் தோன்றும். ஆனால் பாவலர் உலகம் தனியுலகம்! இதெல்லாம் அவர்களுக்கு ஒரு விளையாட்டு. அவர்கள் உள்ளத்தைக்