50 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
அப்படித்தான் இருவர் செயலும் இருக்கும். இருவர் மனமும் போக்கும் ஒரே தன்மையன. அதனால் சண்டைகள் நிகழ்வதுண்டு. சினந்து வெளியேறி விடுவதுமுண்டு. ஆனால் இச்சினம் சில நாள்தான் நிற்கும். பிறகு கவிஞர் இன்ப மாளிகைக்கு வந்து விடுவார். சண்முகனார் எவ்வகை வேறுபாடு மின்றி நடந்ததை மறந்து விட்டு, உள்ளம் ஒன்றிப் பழகுவார். கணவன் மனைவியரிடையே ஏற்படும் ஊடல் எவ்வளவு நேரம் நிலைக்கும்? உடனே மறைந்து விடும். பின்னர் ஒன்றி விடுவர். அவ்வாறே இவர்கள் நட்பில் ஏற்படும் ஊடலும் இருக்கும். மைத்துனர் முறையல்லவா? ஊடலும் கூடலும் நிகழ்வது இயல்புதானே! இந்நிகழ்ச்சிக்கு எடுத்துக் காட்டாக, அண்ணன் இராம. சுப்பையா அவர்கள் எழுதிய 'நானும் என் திராவிட இயக்க நினைவுகளும்' என்ற நூலில் ஒன்று காணலாம். "பாரதிதாசனோட புத்தகங்களை வெளியிடறதுக்காகவே, 'முத்தமிழ்க் கழகம்' (முத்தமிழ் நிலையம்) ஒன்று ஆரம்பிக்கப் பட்டது. கானாடுகாத்தான் வை.சு. சண்முகம் அவர்கள்தான், அந்தக் கழகத்தோட 'மானேஜிங் டைரக்டர்.' அப்போ முரசொலியில் இருக்கிற திரு. அரு. பெரியண்ணன், முருகு, சுப்பிரமணியன் எல்லாம் அந்தக் கழகத்திலே இருந்தாங்க. அதுலே பாரதிதாசனுக்கும் வை.சு.வுக்கும் கொஞ்சம் ஒத்து வரலே. பாரதிதாசன் ரொம்ப முரட்டுக் குணம். வை.சு.வும் யாருக்கும் பயப்பட மாட்டார். ஒருநாள் பாரதிதாசன் நம்ம வீட்டுக்கு வந்து, உடனே வை.சு. வீட்டுக்குப் போகணும்னார். ரொம்பக் கோபமா இருந்தார். உடனே நான் (இராம. சுப்பையா) கிளம்பிட்டேன். எங்க கூட சாமி. பழநியப்பனும் வந்தாரு. கானாடுகாத்தான் போய், இந்த விஷயத்தைப் பத்திப் பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னே பொதுவாய் பேசிக்கிட்டிருக்கும் போதே பாரதிதாசனுக்குக் கோபம் வந்திடுச்சு. 'எழுந்திருங் கப்பா... இனிமே இந்த வீட்லே ஒரு நிமிஷம்கூட இருக்கக் கூடாது'ன்னு சத்தம் போட்டார். வேகமாக வாசலுக்கு வந்தோம். (நகரத்தார் வீடுகள் மிகப் பெரிதாக இருப்பதால் முகப்பு வாயில் பூட்டப் பட்டிருப்பது வழக்கம். வேறு வழியில் புழக்கமிருக்கும்) சாமி. பழநியப்பன், கவிஞர்கிட்டே, 'ஐயா, வீடு பூட்டியிருக் கிறது' ன்னு மெதுவாச் சொல்ல, சத்தம் போட்டு 'உடை'ன்னாரு. |