முடியரசன் உறவு முடியரசனாகிய நான் கவியரசராகிய பாரதியாரைப் பாட்ட னாகவும் பாவேந்தரைத் தந்தையாகவும் கருதி வருபவன். பாட்டனும் தந்தையும் இன்ப மாளிகையில் அமர்ந்தாடிய ஊஞ்சலில் நானும் அமர்ந்து ஆடும் பேறு பெற்றுள்ளேன். விடுதலைப் பறவையாகிய பாரதியும் உணர்ச்சிப் பறவை யாகிய பாரதிதாசனும் உரிமையுடன் பறந்து திரிந்த இன்ப மாளிகையில் நானும் பறந்து வந்துள்ளேன். அவ்வானம் பாடிகளுக்கு எத்தகைய வரவேற்பும் மதிப்பும் அன்பும் உரிமையும் வழங்கப்பட்டதோ அதே வரவேற்பும் மதிப்பும் அன்பும் உரிமையும் சிட்டுக் குருவியாகிய எனக்கும் வழங்கப்பட்டன. வயி.சு. சண்முகனாரும் மஞ்சுளாபாய் அம்மை யாரும் எனக்குப் பெற்றோர் நிலையிலிருந்து, அன்பு பொழிந்தனர். இன்ப மாளிகை என் சொந்த மாளிகையாகவே விளங்கி வந்தது. அக்குடும்பத்தில் நானும் ஓர் உறுப்பினனாகவே இருந்து வருகிறேன். சண்முகனாரிடம் அன்பும் உரிமையும் நான் பெற்ற அளவிற்கு, உதவிகள் பெற்றிலேன். உதவிகள் பெறுமளவிற்குச் சூழ்நிலைகள் ஏற்படவில்லை. மேலும் நான் தொடர்பு கொண்ட காலத்தே, சற்று நொடித்திருந்தார். பாட்டுப் பறவைகள் உலவிய அந்த இன்ப மாளிகை, அரண் மனையோ என ஐயுறத்தக்க அக் கொலுமண்டபம் இப்பொழுது மண்மேடாக்கப்பட்டுக் கிடப்பதைக் காணின் நெஞ்சங் குமுறும்! வயிறு பற்றி எரியும்! ஒரு முறை என்னை விளித்து, தம் மகள் பார்வதி நடராசனைச் சுட்டிக்காட்டி, 'இனி, இவள் உன் அக்காள்; ஏதேனும் உதவி தேவை எனில் அக்காளிடம் போய்ச் சொல்' என்று கூறினார். அவ்வாறே என் உடன் பிறந்த தமக்கை யாகவே அம்மையாரும் இருந்து வருகிறார். |