பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்57

பாரதியாரைப் பற்றியும் சண்முகனாரைப் பற்றியும் அரிய செய்திகள் நமக்குக் கிட்டும்.

இப்பாடலில் வரும் "யாம் நாடும் பொருளை எமக்கீந்து எமது வறுமையினை இன்றே கொல்வாய்" என்ற வரிகள் நம் நெஞ்சத்தைக் குடைகின்றன. வறுமையில் அம் மாபெருங் கவிஞன் வாடியதையும் 'இன்றே கொல்வாய்' அவ்வறுமையை எனக் கதறுவதையும் நாடும் பொருளை எமக்கீவாய் என வேண்டுவதையும் நினையும் பொழுது உள்ளம் உடைகிறது.

கரந்திருந்த பாடல் திருடப்பட்டது

மறைந்து கிடந்த இப்பாடல் உலகறிய வெளி வந்ததே ஒரு கதை. பாரதியார் பாடலொன்று சண்முகனாரிடம் இருக்கிற தென்பதை அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது அறிந்து கொண்டோம். அதனைப் பார்க்கலாமா? என்று நாங்கள் வேண்டிய பொழுது மறுத்து விட்டார்.

எனக்கும் நண்பர் தமிழண்ணலுக்கும் அப்பாடலைப் பார்த்துவிட வேண்டுமென்று ஒரே துடிப்பு. அவர் துணைவி யார் மஞ்சுளாபாய் அம்மையாரிடம் தனியே கெஞ்சினோம். 'சரி, இன்னொருநாள் வாருங்கள்; தேடி எடுப்போம்' என்றார்.

அதன்படி நாங்கள் இருவரும் கானாடுகாத்தான் சென்றோம். அப்பொழுது இன்பமாளிகை கைவிட்டுப் போனதால் ஓட்டுக் குடிலில் வாழும் சமயம் அது.

நாங்களும் அம்மையாரும் ஓரறையில் இருந்த பெரிய பெட்டி யொன்றைத் துருவித் துருவி ஆரய்ந்து கொண்டிருந் தோம். நாங்கள் வேறு ஏதோ பணி செய்கிறோம் என்று கருதிக் கொண்டிருந்தார் சண்முகனார்.

பாரதியார் மடல்களை ஒவ்வொன்றாகப் பார்க்கிறோம்; படிக்கவில்லை. பாடல் தெரிகிறதா என்று பார்ப்போம். இல்லை யென்றால் மடித்து வைத்து விடுவோம். படித்துக் கொண்டிருந்தால் நேரம் ஆகும். இவ்வளவு நேரம் என்ன செய்கிறீர்கள்? என்று அதட்டுவார். அதனால் அஞ்சிக் கொண்டே விரைந்து விரைந்து பார்த்தோம்.

எங்கள் முயற்சி வீண்போகவில்லை. பாடல்கள் எழுதிய தாளொன்று கிடைத்துவிட்டது. அப்பொழுது நாங்களடைந்த மகிழ்ச்சிக்கு ஓர் அளவே கிடையாது.