காரைக்குடி இந்துமதாபிமான சங்க அன்பர்கள், பாரதியார் நேரே கானாடுகாத்தான் போய் விடுவதற்குச் சம்மதிக்கவில்லை. கவிஞருடன் அளவளாவி அவருடைய கவிதைகளைக் கேட்க விரும்பினார்கள். வை.சு. கூறுகிறார். "நம் கவிஞர் திலகத்தைக் காலஞ் சென்ற செ.அ.ராம. முருகப்பச் செட்டியார் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் அவருடைய தோழருடன் இறக்கினோம். அங்கேயே அவர்களுடைய குளியல், உணவு முடிந்தது." "நம் கவிஞர் பெருமானின் அழகிய திருவடிவமும், திறமும், மீசை விறைப்பும், அன்புகனிந்து வெடிப்புறப் பேசிய பேச்சும், உணர்ச்சி மிகுந்த நடுங்க வைக்கும் தோற்றத்துடன் நெஞ்சில் பதியுமாறு சொற்களை வீசிய வீரமும், அசையாத தெய்வ பக்தியும், புலமையின் தெளிவும், எல்லோர் உள்ளத்தையும் கவர்ந்து விட்டன. தாம் இயற்றிய பாடல்களைப் பண்ணோடும் - உணர்ச்சி யோடும் அவர் பாடியது கேட்டு நம் அன்பர்கள்அளவிலா மகிழ்ச்சிப் பெருக்கடைந்த பிறகு எங்களைப் புறப்பட அனுமதித்தனர்." "28-10-1919 அன்று மாலை கவியரசர் கானாடு காத்தான் வந்து சேர்ந்தார்கள்...... 1918 டிசம்பரில் புதுவையை விட்டு சென்னை மாகாணத்துக்குத் திரும்பி வந்து, தமது மனைவி யாரின் ஊரான கடயத்தில் வசித்தார் - பாரதியார். அவருக்குப் பல இன்னல்கள் நேர்ந்தன. தமது நூல்களைப் பிரசுரிக்கவும், புதிதாக ஒரு பத்திரிக்கை துவங்கவும் முயன்றார். ஆதரவு இல்லை. எட்டயபுரம் மன்னரைப் போய்ப் பார்த்துச் சீட்டுக் கவி அனுப்பினார். மன்னர் இவரைச் சந்திக்கவே பயந்து, ஆதரவு தராமல் விடுத்தார். இவ்வாறு மனம் கசந்த நிலைமையிலேயே, 'கவிதையினி வானவர்க்கே அன்றி, மக்கட் புறத்தார்க்கீயோம்' என்று உறுதி பூண்டார் கவிஞர். இந்த உறுதியைத்தான் வை.சு.வின் பேரன்பும் ஆதரவும் மாற்றி விட்டன.... பாரதியார் காலமான பின்னரும், பாரதியார் குடும்ப நலனில் வை.சு. ஊக்கம் காட்டினார். பாரதியார் காலமான பின் பாரதி நூல்களை வெளியிட்டு, அதிலிருந்து ஜீவனம் நடத்தப் பாரதி குடும்பம் முயற்சி செய்தது. இது வெற்றிகரமாக நடக்கவில்லை. 1923இல் பாரதி குடும்பத்தின் சிரமத்தைப் போக்கும் கருத்துடன் பாரதி நூல்களின் உரிமையைப் பத்தாயிரம் ரூபாய் |