பக்கம் எண் :

சீர்திருத்தச் செம்மல்75

அஞ்சி, நெருங்கிய உறவினர்கள், ''சீதனப் பணத்துக்காக வீட்டை இலக்குமி ஆச்சி பேரில் மாற்றி எழுதி வையுங்கள்; வீடாவது மிஞ்சட்டும் என்று வேண்டினர்.

'அது அயோக்கியன் செய்கிற வேலை; என்னையுமா அதைச் செய்யச் சொல்கிறீர்கள், முடியாது' என்று மறுத்து விட்டார். வீட்டை இழக்க நேரினும் ஏற்றுக் கொள்ள அணியமாக இருந்தார். நேர்மையிழக்க ஒருப்படவில்லை.

சண்முகனாரின் பதினெட்டாம் வயதில் தொடங்கிய வழக்கு, இறுதிக் காலம் வரை தொடர்ந்து கொண்டே யிருந்தது. வழக்கின் பொருட்டு, அவரடைந்த துன்பங்கள், இழப்புகள் எண்ணிலடங்கா. எனினும் விடாப் பிடியாக நின்றார்.

இவ்வழக்கு, செட்டிநாட்டிலும் மலேயாவிலும் மிக விளம்பர மான வழக்கு. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு மேல் நடை பெற்ற வழக்கு. ஆதலின் இலக்கங்கள் பல இழக்கும் நிலை ஏற்பட்டுக் குடும்பம் எய்க்கத் தொடங்கி விட்டது.

இந்நிலையில் இன்ப மாளிகை ஏலத்துக்கு வந்து விட்டது. எனினும் உள்ளூரில் அம்மாளிகையை ஏலத்தில் எடுக்க எவரும் முன் வந்திலர். வழக்கில் தொடர்புடைய எதிரியே பணம் கொடுத்து, 'பினாமி' யாக ஒருவரை விட்டு ஏலத்தில் எடுக்கச் செய்து விட்டார்.

இன்ப மாளிகையில் குறுநில மன்னர் போல வாழ்ந்த சண்முகனார், வேறு வீட்டில் குடியிருப்பதை மகன் சோலையும் மகள் பார்வதியும் விரும்பவில்லை. கூடின விலை கொடுத்துப் பெரிய வீடு வாங்கவும் பொருள் வசதியில்லை. அதனால் ஒரு சிறு பழைய வீட்டை மகள் பார்வதி தேடிப்பிடிக்க, மகன் சோலை அதனை விலைக்கு வாங்கித் தர, அவ்வில்லத்தில் சண்முகனார் குடியேறினார்.

சண்முகனார் மறைவுக்குப் பின்னர், வழக்கில் எதிரியாக இருந்தவர் இன்ப மாளிகையை இடித்து, இத்தாலியப் பளிங்குக் கற்களினாலும் உயரிய வேலைப் பாடமைந்த மரங்களினாலும் கட்டப்பட்ட வீட்டை இடித்துப் பிரித்தெடுத்து, வெள்ளைக் கற்சுவர்களைக் கூட விடாமற் பிரித்து, அவற்றை விற்றுப் பணமாக்கி விட்டார்.

தலைவர்கள், பாவலர்கள், சான்றோர்கள் பலரின் காலடி பட்ட அந்த இன்ப மாளிகை இன்று தரையோடு தரையாகி, மண்மேடிட்டு, முட்புதர்கள் மண்டிக் காண்போர் கண்ணையும் நெஞ்சையும் கலங்கச் செய்து, கையறுகாட்சி தந்து கிடக்கிறது.