86 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
நிலை அது. அதாவது 'பெண் தட்சணை!' எப்படியாகிலும், பணம் கொடுத்து மணம் புரிவது சமூகக் கொடுமைதானே, ஆகவே அதை எதிர்த்துத் தனவைசிய சங்கத்தின் சார்பில் திரு. வை.சு. ஒரு போராட்டத்தைத் தொடங்கினார். அவ்வாறு நடக்கும் திருமண வீடுகளின் முன்பு, முதல் நாளே தொடங்கி ஒரு மறியல் போராட்டம் நடத்துவதே சங்கத்தின் திட்டம். முதலில், நச்சாந்துபட்டி என்னும் ஊரில் நடைபெற்ற ஒரு பணக்காரன் வீட்டுத் திருமணத்தில் போராட்டம் தொடங்கி னோம். இளைஞனாக இருந்த நானும் அப்போராட்டத்தில் கலந்து கொண்டேன். திருமணத்திற்கு முதல் நாளே, நாங்கள் நச்சாந்து பட்டிக்குப் புறப்பட்டு விட்டோம். அங்கு போய்ச் சேரும்போது இரவாகி விட்டது. இரவு முழுவதும் திருமண வீட்டிற்கு முன் நின்றுகொண்டு முழக்கமிட்டோம்; மறியல் செய்தோம். "பெண்ணை வளர்த்துக் காசுக்கு விற்பதா?" என்ற முழக்கம் இன்னும் என் நினைவில் உள்ளது. திருமணம் நடத்திய அப்பணக்காரனும் எங்களுக்குப் பணிவதாக இல்லை. வேலைக்காரர்களை வைத்து முற்றம் நிறையத் தண்ணீரை இறைத்துக் கட்டி வைத்து, திடீரென்று திறந்து விட்டுவிட, நாங்கள் நின்று கொண்டிருந்த இடம் முழுவதும் தண்ணீர். எங்களை அங்கிருந்து விரட்டவே அந்த ஏற்பாடு. ஆனால் நாங்களும் அங்கிருந்து நகர்வதாக இல்லை. ஆளுக்குப் பத்துச் செங்கற்களை எடுத்துக் கொண்டு வந்து போட்டு, அவைகளின் மேல் நின்று கொண்டு மீண்டும் முழக்கமிட்டோம். அடுத்த நாள் முகூர்த்த நேரம் தவறிப் போய், பிறகுதான் திருமணம் நடந்து முடிந்தது. இப்படி ஒரு போராட்டத்தை அன்றைய செட்டிநாடு பார்த்ததே யில்லை. "முத்தமிழ் நிலையம்" என்ற பெயரில் ஒரு பதிப்பகம் நிறுவி புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் நூல்களையெல்லாம் திரு.வை.சு. அவர்கள் வெளியிட்டார்கள். கவிஞருக்கும் அவருக்கும் இடையில் மிக நெருக்கமான நட்பும்இருந்தது; இடையில் ஒருமுறை சண்டையும் வந்தது. எல்லாவற்றிற்கும் நான் சாட்சியாய் இருந்திருக்கிறேன். நினைத்துப் பார்க்க, நினைத்துப் பார்க்க, திரு. வை.சு. அவர் களோடு இணைந்திருந்த காலத்து நிகழ்ச்சிகள் பல நினைவுக்கு வருகின்றன. எல்லாவற்றையும் ஒரு கட்டுரையில் எழுதிவிட முடியாது. |