98 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 |
காரியங்களோடு உருக்கமாகக் கூறினார்கள். எங்களின் நல்ல இல்லற வாழ்க்கைக்கு அந்த அறிவுரைகளே அஸ்திவாரமாக அமைந்தன. அய்யாவின் வளர்ப்பு, அம்மானைச் சிறந்த மனிதனாக ஆக்கியது. அவர்களின் மகள் பார்வதி ஆச்சி அவர்களின் திருமணத்தை அந்தக் காலத்திலேயே பி.டி. ராசன் அவர்கள் தலைமையில் சீர்திருத்த முறையில் நடத்தினார்கள். திருமதி. பார்வதி நடராசன் அவர்கள் எதையும் சிந்தித்துச் செயலாற்றம் தன்மை கொண்டவர்கள். என் மைத்துனர் ராஜா. சண்முகம் அவர்கள் சிங்கப்பூர், மலேசியா சென்றபோது அவர்களுக்குத் துணையாக இருந்து, வந்த கஷ்டங் களையெல்லாம் சமாளித்து இருவரும் வெற்றி பெற்றார்கள். இந்த மன தைரியத்துக் கெல்லாம் அய்யாவின் துணிச்சலான வளர்ப்பு முறையே காரணம். எங்கள் வீட்டில் சில நாள்கள் வந்து தங்கியிருந்தார்கள். அதுவும் நாங்கள் திருமணம் செய்து கொண்ட புதிதில் அவர்களின் அறிவுரை களும் வாழ்க்கை முறைகளும் எங்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்தன. கடிதங்கள் எழுதுவது - அதற்கு நகல் எடுத்துக் கொள்வது - பதில் கடிதங்களைப் பதிவு செய்து வைப்பது - அன்றைய செலவுகளை அன்றே கணக்கில் எழுதி இருப்புப் பார்ப்பது - எதையும் குறிப்பிட்ட காலத்தில் செய்வது - உணவில் கட்டுப்பாடு - உறக்கத்தில் ஒழுங்கு - பிள்ளைகளிடம் அன்பு, அதே நேரத்தில் கண்டிப்பு - எதையும் துணிவோடு சொல்வது, செய்வது இவை போன்ற பல - அவர்களின் கடமைகளாகும். செட்டிநாட்டில் சீர்திருத்தத்துக்கு வித்திட்டவர்களின் வரிசையில் இவர்களுக்கு முதலிடம். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் வைராக்கிய மாக எடுத்த காரியத்தை முடித்துக் காட்டுவார்கள். காந்தியார் நூற்ற நூலால் செய்த துண்டை அன்றே ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி தேசப்பற்றைக் காட்டிக் கொண்டார்கள். பாரதியார் படங்களை இன்று பார்க்கிறோமே அந்தப் படங்கள் அய்யா அவர்கள் முயற்சியில் எடுக்கப் பட்டவை. பாரதியார் அய்யாவைப் பற்றிப் பாடியபாடல் குறிப்பிடத் தக்கது. அய்யாவின் அன்பை, விருந்தோம்பலைப் பெறாத தமிழறிஞர்கள் மிகக் குறைவு. |