| 110 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
தவறாமல் நல்குவான். பிறர் புகழ்ந்து கூறினும் அவர்கள் மொழி பொய்போகாதவாறு வழங்குவான். இதுவே இவன் பண்பாகும்; தெய்வ நம்பிக்கை மிக்கவன்; இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழிலும் வல்லவன்; எவராலும் வெல்ல இயலாத வீரத்தையுடையவன். தோற்றப் பொலிவு இவன் மார்பு மலை போன்றதாகும். அதில் அரவு போன்ற ஆரம் உள்ளது. அதில் வையகம் விளங்கும் மணிக்கல் பதித்துள்ளது. இந்தக் கோலத்தில் அவனது மேனியே ஒரு பூவாகப் பூத்திருந்தது. வஞ்சமன் கூடல் இவன் காலத்தில் கொங்குநாட்டைச் சேர்ந்த கரூர், சேரர்க்குச் சேர்ந்திருந்தது. கரூருக்கு எட்டுக் கி. மீ. தொலைவில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற வெஞ்சமக் கூடல் என்னும் சிவதலத்தைக் கருங் கற்களால் கட்டினான். அவ்வூர் அவனது பெயரால் வழங்கி வந்தது. வஞ்சமன் கூடல் என்பது பேச்சு வழக்கில் வஞ்சமாங்கூடல் - வெஞ்ச மாங்கூடல் என மருவி வழங்கப்படுகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத் தலத்தைப் பற்றித் தேவாரம் பாடியுள்ளார். அப் பாடலைப் பார்த்தால் சேரமான் வஞ்சன் காலத்தில் அவ்வூர் சிறப்புற்று விளங்கியது என்பது தெரிகின்றது. அவ்வூர் சிற்றாற்றின் கீழக்கரையில் உள்ளது. சேரமான் மாரிவெண்கோ சேரமான் மாரிவெண்கோ,1 சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி, பாண்டியன் கானப் பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய சேர, சோழ, பாண்டிய அரசர்கள் ஓரிடத்தில் மகிழ்ந்து நட்புற வோடு கூடியிருந்ததாகக் கொளுக் குறிப்பிடுகிறது. பாடலில் ‘கொடித் தேர் வேந்தர்’ என்று விளித்து அவ்வையார் அறிவுரை கூறியுள்ளார். அவர்கள் ‘முத்தீ’ப்போல் இருந்ததாக அவர் குறிப்பிடுவதால் மூன்று அரசர்கள் என்பதும் உறுதியாகிறது. மூன்று அரசர்கள் இன்னார் என்று கொள்வதற்குப் பாடலில் சான்று இல்லை. பார்ப்பார்க்கும் இரவலர்களுக்கும் கொடை வழங்க வேண்டும் என்றும். மகளிரோடு மதுவருந்தித் திளைத்து வாழ வேண்டுமென்றும் அந்த மூவரையும் அவ்வையார் வாழ்த்துகிறார்.
1. புறம். 367, கொளு |