பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்111

மூவேந்தர் கூட்டாட்சி

சமயத்திற்கேற்றாற்போல் மூவேந்தர்களில் இருவர் ஒன்று சேர்ந்துகொண்டு மற்றொருவனை எதிர்த்து நிற்றல் சங்ககால வரலாற்றில் பொது நிகழ்ச்சி. ஆனால், மூன்று அரசர்களும் உணர்வால் ஒன்றி உடலால் நெருங்கியிருந்து தமிழ்நாடு முழுவதையும் ஒருமைப் பாட்டு உணர்வுடன் ஆளமுனைந்தது இவன் காலத்தில் தான். இந்த நிகழ்ச்சி தமிழக வரலாற்றில் கிடைக்கும் சான்றுகளில் முதல் அரசியல் ஒருமைப்பாட்டு நிகழ்ச்சியாகத் திகழ்கிறது.

சேரமான் பெருஞ்சேரலாதன்

சேரமான் பெருஞ்சேரலாதனுக்கும்1 கரிகால் பெருவளத்தானுக்கும் போர்மூண்டது. போர், வெண்ணி என்னும் ஊரில் நடை பெற்றது. இது சோழனுடைய ஊர்.2 எனவே, இந்தச் சேர அரசன் படையெடுத்துத் தாக்கினான் எனத் தெரிகிறது. போரில் கரிகால் வளவன் வெற்றி பெற்றான். எனினும், முடிவு எல்லா மக்களுடைய உள்ளத்தையும் உருக்கும் அவலமாக முடிந்தது.

போர்க்களத்தில் இரண்டு அரசர்களும் நேருக்குநேர் நின்று போரிட்டனர். கரிகாலன் வலிமையுடன் வேல் வீசினான். அந்த வேல் சேரலாதனின் மார்பில் பாய்ந்து முதுகில் கழன்றோடி விட்டது. இதனால் தன் முதுகில் காயம்பட்டதை அறிந்த சேரலாதன் போரிடுவதை நிறுத்திவிட்டான். போர்க்களத்திலேயே வடக்குத் திசையை நோக்கி அமர்ந்து உயிர்துறந்தான்.

தமிழர்கள் மார்பில் படும் காயம் ஒவ்வொன்றையும் தமக்குக் கிடைத்த பேறு என்று கருதுவர்.3 முதுகில் எதிர்பாராது காயம் பட்டாலும் அப் புண் தம்மைப் புறமுதுகு காட்டியவர் என்று சிலரையேனும் எண்ணத்தூண்டும் என்று எண்ணி அப் புண்ணை ஆற்றிக்கொள்ளா மலேயே மாய்வர். நெடுஞ்சேரலாதன் தன் முதுகில் பட்ட புண் தானே ஆறித் தான் பிழைத்துவிட்டால் என்ன செய்வது என்று எண்ணிப் போர்க் களத்திலேயே வடக்கிருந்தான். புறப்புண்ணோடு தன் நாட்டுக்குச் செல்ல


1. புறம். 65: அகம். 55 : 10 .11

2. ‘கோயில்வெண்ணி’ என்பது இவ்வூரின் வழக்கு

3. ‘விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்

வைக்குந்தன் நாளை எடுத்து’ (குறள். 776)