பக்கம் எண் :

112மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

விரும்பாமல் போர்க்களத்திலேயே வடக்கிருந்தான். தன் மானத்திற்கு இழிவு நேர்ந்த அப்பொழுதிருந்தே தன் உயிரைக் கொஞ்சம் கொஞ்ச மாக மாய்த்துக் கொண்டான். வடக்கிருத்தல் என்பது வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணாமல் உயிர் துறப்பது. தன் வாளைத் தனக்கு எதிரே ஊன்றி வைத்துவிட்டு வடக்கிருக்கும் பழக்கத்தால் அது ‘வாள் வடக்கிருத்தல்’ 4 எனப்பட்டது.

மக்கள் அவலம்

எந்த இசைக்கருவியும் முழங்கவில்லை; வீரர்கள் கள் உண்ண வில்லை; உறவினர்கள் தேறல் அருந்தவில்லை; உழவர்கள் தம் கடமை ஆற்றும்போது சோர்வை மறைக்க எழுப்பும் ஓசையை எழுப்ப வில்லை; ஊர்களிலே மகிழ்ச்சி நடமாட்டம் இல்லை. இவ்வாறு எங்கும் அவலம். சேரனுக்காகச் சோழ நாட்டிலேயே இத்தகைய அவலம். படையெடுத்துத் தாக்கிய பகைவன் சாகிறான் என்பதில்கூட அவலம். இது சோழநாட்டு மக்கள் நிலை.5

சான்றோர் அவலம்

சேரலாதன் நிலைமைபற்றிய செய்தி சான்றோரிடையே பரவியது. கேட்ட சான்றோர் ஆங்காங்கே தாமும் வடக்கிருந்தனர்; உயிர் துறந்தனர்.6

புலவர் கருத்து

இவன் இறந்துவிட்டபின் ஞாயிறு தோன்றிப் பயன் இல்லை; பகலும் இரவுதான்.7 இவ்வாறு கூறுகிறார் கழாத்தலையார்.

வெண்ணிக் குயத்தியார், வென்ற கரிகாலனிடம் கூறுகிறார்:8 ‘வென்ற சோழனுக்கு வெற்றிப் புகழ், தோற்ற சேரனுக்கோ வீரப் புகழ். வெற்றிப் புகழைக் காட்டிலும் வீரப் புகழ் நல்லதாம்.’

இவ்வாறெல்லாம் பெருஞ்சேரலாதனின்மீது அதாவது, படை யெடுத்துத் தாக்கியவன்மீது எல்லாருக்கும் இரக்கம் தோன்றக் காரணம் என்ன? கரிகாலன் செய்த கொடுமை. பகைவன் மார்பில் வேலைப் பாய்ச்சியது கொடுமையா? இல்லை. அது அவன் கடமை. பின் என்ன? அவன் வலிமையிலே சோர்வு. மார்பில் பாய்ந்து முதுகில் வெளிவரும்படி


4. புறம். 65 : 11

5. ௸ 65 : 1 - 5

6. அகம். 55 : 11 - 15

7. புறம். 65 : 12

8. ௸ 66