பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 113 |
எய்த அவனது பெருவலிமையிலா சோர்வு? இல்லை இல்லை. பகைவனுக்குப் போரிட வாய்ப்பு நல்குவது தமிழர் போர்த்துறைகளிலே தலைமையான பண்பு. படைக்கலம் இல்லாதவனோடு படைக்கலம் தந்து போரிடுவான். இறுதித் தாக்குதலில் அன்றி எடுத்த எடுப்பிலேயே திடீரென்று கொன்றுவிடமாட்டான். கரிகாலன் செய்த பிழை அதுதான். எடுத்த எடுப்பிலேயே முதல் வீச்சிலேயே அரசரை வீழ்த்திவிட்டான். இந்த நிகழ்ச்சியைக் கொடிய சூழ்ச்சி. மோசமான சூழ்ச்சி என்று எல்லோரும் கருதினர். கரிகால் வளவன் இளைஞன். அவனிடம் சூழ்ச்சி இல்லை. ஏதோ இளமைத் துடுக்கு நிகழ்ந்துவிட்டது. அரசன் செயலை மக்கள் உள்ளம் ஏற்றுக்கொள்ளவில்லை; குறைகூறவும் இடமில்லை; விளைவு, பகைவன்மீது இரக்க உணர்வு; மரியாதை நிகழ்ச்சி. நாட்டுத் தலைவர்களை இழக்கும்போது இப்போது நாம் துக்கம் கொண்டாடுவதில்லையா? அதுபோல அன்று மக்கள் துக்கம் கொண்டாடினர். பகைவன் இறந்ததற்காகத் துக்கம் கொண்டாடினர். கொல்லிமலைத் தலைவன் ஓரியைக் காரி கொன்றான். அப்போது ஓரிக்காக அவன் நாட்டுமக்கள் துக்கம் கொண்டாடினார்கள். ஒல்லையூர் நாட்டில் பெருஞ்சாத்தன் மாய்ந்தான். அப்போது அவனால் நலமடைந்தோர் துக்கம் கொண்டாடினார்கள். இந்தத் துக்க நிகழ்ச்சிகளையெல்லாம் விஞ்சிய துக்க நிகழ்ச்சி பெருஞ்சேர லாதனுக்காகக் கொண்டாடப்பட்ட துக்க நிகழ்ச்சி. ஞாயிறும் திங்களும் நிறைமதிநாள் மாலை நேரத்தில் ஒரு சுடர் மறைகிறது. ஒரு சுடர் எழுகிறது. சேரலாதன் மறைகிறான்; கரிகால் வளவன் எழுகிறான். ஆற்றல் மிக்க ஞாயிறு சேரலாதன். ஒளிமிக்க திங்கள் கரிகால் வளவன்.9 இந்த உவமையால் பெறப்படுவது என்ன? வெண்ணிக்குயத்தியார் கூறுவதுபோல்10 சேரன் சோழனைக் காட்டிலும் நல்லவன்; வல்லவன். வேறு பெயர் ‘சேரமான் பெருந்தோளாதன்’ என்னும் பெயரும் இவனுக்கு வழங்கிவந்ததாகத் தெரிகிறது.11
9. புறம். 65 10. ௸ 66 : 4 - 8 11. ௸ 65 ‘கொளு’ |