பக்கம் எண் :

116மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

இளங்கோ கருத்து3

இவன் சேர அரசன். பாரதப்போரில் சோறு அளித்தான். சேரர் குடியில் சேரன், பொறையன், மலையன் என்னும் பெயருடன் வரும் கிளைக் குடிகள் உண்டு. அந்தக் குடிகளில் இவன் எந்தக் குடியைச் சேர்ந்தவ னானாலும் இவன் சேரர் குடியினன், இவனால் சேரர் குடிக்கே பெருமை.

பெயர் ஒப்புமை, வள்ளன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இருவரையும் ஒருவர் என்று கூறுகின்றார். இந்த ஒப்புமை மேம் போக்கானது. ஆழ்ந்த நோக்கில் வேற்றுமைகளே மிகுதி. எனவே, இருவேறு அரசர்கள் என்று கொள்வதே சரியானது.

பாரதப்போரே கட்டுக்கதை என்பது சிலர் துணிபு. இஃது உண்மை யாயின், இவன் அப்படையினருக்கு உணவு கொடுத்தான் என்று கூறுவது வரம்பிகழ்ந்த புகழ்ச்சி. பாரதப் போர் நிகழ்ந்தது உண்மை யாயின், இவன் அப்படையினர்க்குச் சோறு வழங்கியதும் உண்மை.

சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள்
கோப்பெருஞ்சேரல் இரும்பொறை

இந்த அரசனின் பெயரைப் புறநானூற்றுக் கொளுக் குறிப்பிடுகிறது.1 பாடலில் பெயர் இல்லை.

நாடு

இவன் கானக நாடன் என்றும் பாடலில் குறிப்பிடப்படுகிறான். எருமை போன்ற கருங்கற்களுக்கிடையில் ஆடுமாடுகள் மேய்வது போல யானைகள் மேயும் கானக நாடு அந்த நாடு என்று பாடல் கூறுகிறது. உம்பல் என்னும் சொல்லுக்கு யானை என்பது பொருள். உம்பற் காட்டில் (இக்காலத்து ஆனைமலைப் பகுதி) யானைகள் மிகுதி. பாடல் குறிப்பால் இவன் தொடக்கக் காலத்தில் ஆனைமலைப் பகுதியில் அரசாண்டு கொண்டிருந்தான் என்று கருதலாம்.

கொங்கு நாட்டில் ஒரு கருவூர் உண்டு. இவ்வூர் சேரநாட்டுக் கருவூர் நினைவாகப் பெயர் சூட்டப்பெற்றது என்பது வரலாற்றாசிரியர்களின் கருத்து. காவிரிக் கரையிலுள்ள முசிறியும் தாராபுரத்திற்கு வழங்கிவந்த வஞ்சி என்னும் பெயரும் இந்த முறையில் சேரர்களால் நினைவுச் சின்னப் பெயர்களாக வழங்கப்பட்டவை.


3. சிலப், 29 ஊசல்வரி 1. புறம். 5