பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்117

உம்பற்காட்டில் ஆட்சி செய்துகொண்டிருந்த கோப்பெருஞ்சேரல் இரும்பொறை இந்தக் கொங்குநாட்டுக் கருவூருக்கு வந்து அரியணை யேறி அரசு புரியலானான். ஒருவேளை இவனே இக் கருவூர் வந்து ஆளத்தொடங்கிய முதல் சேர அரசனாக இருக்கலாம். ஆனதுபற்றி இவனுக்குக் ‘கருவூர் ஏறிய’ என்னும் சிறப்பு அடைமொழி கொடுக்கப் பட்டிருக்கலாம். இந்தச் சிறப்பு அடைமொழியில் ‘ஒள்வாள்’ என்னும் அடைமொழியும் உள்ளது. இந்த அடைமொழி இவன் வாட்போரில் கொங்குநாட்டில் பெற்ற வெற்றியைக் குறிப்பதாக இருக்கலாம்.

நரிவெரூஉத்தலையார் என்னும் புலவர் இவனைக் கண்டு பாடினார். அன்பும் அருளும் இல்லாதவர்களோடு சேராமல் நாட்டைக் குழந்தையைப்போல் பேணி வளர்க்கவேண்டும் என்று அவனுக்கு அறிவுரை கூறினார். இஃது அவன் புதிதாகக் கைப்பற்றிய நாட்டில் நடந்துகொள்ளவேண்டிய முறையைக் கூறியதாகக் கொள்வது பொருத்தம்.

புறநானூற்றுப் பாடலில் கொளுக் குறிப்பு ஒரு கதையை உருவாக்கியுள்ளது.

இந்தப் புலவரின் தலை, பிணம் தின்னும் நரிகளே வெருண்டு ஓடும்படி அமைந்திருந்தது. இந்த நிலை அவருக்கு ஒரு சாபக் கேட்டால் அமைந்தது. சாபம் கொடுத்தவர் அவருக்குச் சாப விடுதியும் குறிப்பிட்டிருந்தார். சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ் சேரல் இரும்பொறையைக் கண்டபோது சாபக்கேடு நீங்கிப் புலவர் தம் உடம்பு மீண்டும் கைவரப் பெறுவார் என்பது அந்தச் சாப விடுதி. புலவர் அவ்வாறே கண்டார். தம் உடம்பு கைவரப் பெற்றார். கண்டவன் இன்னான் என உணர்ந்து பாடினார். இந்தக் கதைக்குக் கொளு இடமளிக்கிறது; பாடலில் இடமில்லை. நிகழக்கூடிய நிகழ்ச்சியும் அன்று.

புலவரின் பெயர் நரிவெரூஉத்தலையார் என்று குறிப்பிடப் படுகிறது. இவர் தமது பாடல் ஒன்றில் ‘நரைமுதிர் திரை’ என்று பாடியுள்ளார்.2 ‘அணில் ஆடு முன்றி’லைப் பாடியவர் அணிலாடு முன்றிலார் என்றும், ‘செம்புலப் பெயல் நீர் போல’ என்று பாடியவர் செம்புலப் பெயல் நீரார் என்றும் பெயர் பெற்றிருப்பது போல, ‘நரைமுதிர் திரை’ என்று பாடியுள்ள இவர் நரைமுதிர் திரையார் என்று


2. புறம். 195