பக்கம் எண் :

136மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

(தேமூர் ஒண்ணுதல், என்பதற்குத் தேமல் ஊர்ந்து ஒளிவீசும் நெற்றி என்றும் பொருள் கொள்ள இடம் உண்டு.)

சேரமான் கணைக்கால் இரும்பொறை4

இவன் தான் பாடிய பாடலில் விழுப்புண்பட்டு இறக்க வழி யின்றிக் கட்டிப்போட்ட நாய்போல் கிடக்கும் நிலையை வெளிப்படுத்து கிறான். பிறர் முயற்சியால் கிடைத்த நீரை வயிற்றுத் தீத்தணிய இவ்வுலகில் உண்பர் உண்டோ? இல்லை என்கிறான்.

புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர் தம் கொளுக் குறிப்பில் விளக்கமான வரலாற்றைத் தருகிறார்.

சோழ அரசன் செங்கணான் என்பவனோடு இவன் போரிட்டான். போர் ‘திருப்போர்ப்புறம்’ என்னுமிடத்தில் நடைபெற்றது. போரில் சேரன் பிடிபட்டான். குடவாயில் (குடவாசல்) என்னும் ஊரில் ஒரு கோட்டம். அந்தக் கோட்டத்தில் ஒரு சிறை. அந்தச் சிறையில் இவன் அடைக்கப் பட்டான். சிறையில் அடைபட்டுக் கிடக்கையில் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான்; கிடைக்கவில்லை. காலம் தாழ்ந்து வேறொருவன் முயற்சியால் தண்ணீர் கிடைக்கப்பெற்றான். அதனைக் கையிலே வாங்கினான் உண்ண மனம் வரவில்லை. மேலே கண்ட கருத்தமைந்த பாடலைப் பாடினான். தண்ணீரைக் குடிக்காமலேயே மாண்டு போனான்.

களவழி என்னும் நூலுக்கும் இந்தப் போருக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. சோழன் செங்கணான் வரலாற்றில் இதனைத் தெளிவாகக் காணலாம்.

தோற்றம்

கணைய மரம்போல் வலிமைமிக்க கால் இருந்தமையாலோ, கணுக்காலுக்கும் கீழ் இல்லாத காலை உடையவனாக இருந்தமை யாலோ, கணைகள் தாக்கிய விழுப்புண்களைத் தழும்புகளாகக் கொண்டிருந்தமையாலோ, பிற எதனாலோ இவனது பெயரோடு கணைக்கால் என்னும் அடைமொழி அமைந்துள்ளது.


4. புறம். 74