138 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
அறிய வேண்டியது அவசியமாகும். செங்குட்டுவனுடைய வரலாற்றுக் குறிப்புகள் சங்க நூல்களிலேதான் காணப்படுகின்றன. ஆகவே, அவன் சங்க காலத்தில் - கடைச் சங்க காலத்தில் - வாழ்ந்திருந்தான் என்பது தெரிகின்றது. அவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்திருந்தான். அக்காலத்து அரசியல் சூழ்நிலை சங்க நூல்களிலிருந்து தெரிகின்றது. அக்காலத்தில் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர் ஆட்சி செய்திருந்தார்கள். அக்காலத்தில் சேரநாடு தமிழ் நாடாக இருந்தது. மூவேந்தருக்குக் கீழடங்கி, குறுநில மன்னர்களாகிய சிற்றரசர்கள் பலர் இருந்தனர். அவர்களுக்கு அக் காலத்தில் வேளிர் அல்லது வேளரசர் என்பது பெயர். அக்காலத்தில் தமிழகம் சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, துளு நாடு (கொங்கண நாடு), தொண்டை நாடு (அருவா நாடு) கொங்கு நாடு என்று ஆறு பிரிவு களாகப் பிரிந்திருந்தது. சேர, சோழ, பாண்டி நாடுகளை முடியுடைய பேரரசர் மூவர் அரசாண்டனர். கொங்காண நாடாகிய துளு நாட்டை நன்னர் என்னும் பெயருடைய வேளிர் அரசாண்டனர். கொங்கு நாட்டுக்கும் தொண்டை நாட்டுக்கும் பேரரசர் (முடிமன்னர்) அக்காலத் தில் இல்லை. கொங்கு நாட்டையும் தொண்டை நாட்டையும் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். கடைச் சங்க காலத்தின் இறுதியில் (கி.பி. 2ஆம் நூற்றாண்டின் மத்தியில்) மாறுதல் ஏற்பட்டது. சோழன் கரிகால் வளவன் தொண்டை நாட்டைக் கைப்பற்றி அதைச் சோழ இராச்சியத்துடன் இணைத்துச் சேர்த்துக் கொண்டான். சேரன் செங்குட்டுவனுடைய தகப்பனான இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் காலத்தில் கொங்கு நாட்டின் தெற்குப் பகுதிகள் சில சேர இராச்சியத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டன. செங்குட்டுவனின் தமயனான களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் காலத்தில் கொங்கண நாடாகிய துளு நாடு சேரர் ஆட்சியின் கீழடங்கியது. சேர அரசர்கள் கொங்கு நாட்டைச் சிறிதுசிறிதாகக் கைப்பற்றிக் கொண்டிருந்தபோது, சோழபாண்டியர் வாளாவிருக்கவில்லை. சோழரும் பாண்டியரும் கொங்கு நாட்டைத் தாங்களும் பிடித்துக் கொள்ள முயற்சி செய்தார்கள். அதனால் சேர சோழ பாண்டியர்களுக்கு அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. சங்க இலக்கியங்களை ஆராய்ந்து பார்க்கிறபோது சோழ அரசர்களைப் பற்றி ஒரு செய்தி தெரிகிறது. சோழ மன்னர் பரம் |