140 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
ஐந்து கிளையினர் இருந்தனர் என்றும் அவர்கள் வெவ்வேறு இடங்களை அரசாண்டனர் என்றும் அறிகிறோம். அதனால்தான் பாண்டியருக்குப் பஞ்சவர் என்ற பெயரும் இருந்தது. சங்க காலத்தில் வீரர்களுக்குப் பெருமதிப்பு இருந்தது. வீரச் செயல்கள் புகழ்ந்து போற்றப்பட்டன. வீரர்களின் வீரச் செயல்களைப் புலவர்கள் புகழ்ந்து பாடினார்கள். போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் அமைத்துப் போற்றினார்கள். போரும் வீரமும் ஒரு கலையாகவே மதிக்கப்பட்டன. போர்ச் செயலைப் பற்றி இலக்கண நூல்களும் இலக்கிய நூல்களும் தோன்றின. புறப் பொருள் இலக்கியங்கள் பெரிதும் போர்ச் செயலைப் பற்றியே கூறுகின்றன. சங்க காலத்தில் வாழ்க்கையின் குறிக்கோள், காதலும் போருமாக (அகமும் புறமும் ஆக) இருந்தது. சங்க காலத் தமிழகம் வீரர்களைப் போற்றியது; வீரத்துக்கு வந்தனையும் வழிபாடும் செய்தது. வெற்றிக்கும் வீரத்துக்கும் கடவுளாகக் கொற்றவைத் தெய்வம் வழிபடப்பட்டது. சங்க காலத்தில் போர்க்களஞ் செல்லாத அரசர்கள் வீரர்களாக மதிக்கப்படவில்லை. ஆகவே, அரசர்கள் ஏதோ காரணத்தை முன்னிட்டுப் போர் செய்துகொண்டிருந்தார்கள். சங்க இலக்கியத்தில் போர்ச் செயல்கள் அதிகமாகக் காணப்படுவதற்குக் காரணம் இந்தச் சூழ்நிலைதான். போரில் விழுப்புண்பட்டவன் போற்றிப் புகழப்பட்டான். முதுகில் புறப்புண் படுவது இகழ்ச்சிக் குரியதாக இருந்தது. தப்பித் தவறிப் போர்க்களத்திலே முதுகில் புறப்புண்பட்டால், புண்பட்டவர்கள் பட்டினி கிடந்து உயிர் விட்டார்கள். அரசனுடைய படை வீரர்கள் எல்லைப் புறங்களிலே சென்று, அயல்நாட்டு எல்லைப்புற ஊர்களிலிருந்து ஆடு மாடுகளைப் பிடித்துக் கொண்டு போனார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து வந்து மாற்றரசரின் வீரர்கள் போர் செய்து ஆடு மாடுகளை மீட்டுக் கொண்டு போனார்கள். இவ்விதமாக நிகழ்ந்த போரிலே இறந்த வீரர்களுக்கு நடுகல் நட்டு வீரத்தைப் போற்றினார்கள். தம் வாழ்க்கைக் காலத்தில் போரிடாமல், போர்க்களத்தைப் பார்க்காமல், இறந்துபோன அரசர்களைத் தருப்பைப் புல்லின் மேல் கிடத்தி அவர்களின் மார்பை வாளினால் வெட்டிப் புண் உண்டாக்கிப் பிறகு அடக்கம் செய்தனர். இந்த வழக்கம் சங்க காலத் தமிழகத்தில் இருந்ததைக் கூலவாணிகன் சாத்தனாரும் ஒளவையாரும் |