பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்141

கூறுகின்றனர். உதயகுமரன் என்னும் சோழ அரசகுமரன் இறந்தபோது, அவன் தாயாகிய இராசமாதேவி துன்பப்பட்டதை யறிந்து வாசந்தவ்வை என்னும் முதியாள் அரசியிடஞ் சென்று ஆறுதல் கூறினாள். அப்போது அவ்வம்மையார்,

தருப்பையிற் கிடத்தி வாளிற் போழ்ந்து
செருப்புகல் மன்னர் செல்வுழிச் செல்கென
மூத்துவிளிதல் இக்குடிப் பிறந்தோர்க்கு
நாப்புடை பெயராது நாணுத்தக வுடைத்து

என்று கூறியதாக மணிமேகலை சிறைவிடுகாதையில் (13-16) கூலவாணிகன் சாத்தனார் இச்செய்தியைக் கூறுகிறார்.

அதிகமான் நெடுமான் அஞ்சி, தன்னுடைய தகடூர்க் கோட்டையை எதிர்த்தப் பகையரசருடன் போர் செய்து விழுப்புண்பட்டு நின்றான். அப்போது அவனுடைய வீரத்தைப் புகழ்ந்து பாடின ஒளவையார், புண்படாமல் இறக்கும் அரசர் வாளினால் வெட்டப்பட்டு அடக்கம் செய்யப்பட்டதைக் கூறுகிறார்.

அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி
மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த
நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கென
வாள்போழ்ந் தடக்கலும் உய்ந்தனர் மாதோ

(புறம் 93 : 7-11)

என்று ஒளவையார் கூறுகிறார்.

இவ்விதமாக வீரவழிபாடு போற்றப்பட்ட காலத்தில் இருந்த கண்ணகியார், தன் கணவன் கோவலனுக்கு அநீதி செய்த பாண்டியனை அவைக்களத்தில் வழக்காடி வென்று, பாண்டியன் அரண்மனையைத் தீப்பற்றி எரியச் செய்து, பிறகு உண்ணா நோன்பிருந்து உயிர்விட்ட மறக்கற்பைப் போற்றித் தான் அவருக்குப் பத்தினிக் கோட்டம் அமைக்கப்பட்டது.

பண்டைக் காலத்தில் காதலும் வீரமும் போற்றப்பட்டதைச் சரித்திரத் தில் காண்கிறோம். அந்த முறையிலே சங்ககாலத் தமிழகத்திலும் காதலும் வீரமும் (அகமும் புறமும்) போற்றப்பட்டன. முக்கியமாக, வீரமும் வெற்றியும் போற்றிப் புகழப்பட்டன, அரசர்களின் வீரத்தைப்