142 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
புலவர்களும் இசைவாணர்களும் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்த சூழ்நிலை தமிழகத்திலே இருந்த காலத்திலே சேரன் செங்குட்டுவன் வாழ்ந் திருந்தான். அக்காலத்துச் சூழ்நிலை அவனுடைய வாழ்க்கையை உருவாக்கிற்று. அவன் வரலாற்றை இனி ஆராய்வோம். சங்க காலத்துச் சேர அரசர் கடைச் சங்க காலத்துச் சேர அரசர்களில் பேரும் புகழும் பெற்றவன் சேரன் செங்குட்டுவன். சங்க காலத்துத் தமிழ்நாட்டு வரலாற்றில் செங்குட்டுவனுக்கு முக்கியமான இடம் உண்டு. சிறந்த வீரனாகவும் கொடையாளியாகவும் விளங்கியது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் பத்தினித் தெய்வ வணக்கத்தை இவன் ஏற்படுத்தினான். மேலும், சங்க காலத்துச் சரித்திர ஆண்டுகளைக் கணக்கிடுவதற்கு இவனுடைய வரலாறு துணையாக நிற்கிறது. செங்குட்டுவனும் அவனுடைய நண்பனான இலங்கையரசன் கஜபாகுவும் சமகாலத்து அரசர் என்பதனாலே இவர்கள் காலத்தை ஆதாரமாகக் கொண்டு சங்க காலத்து வரலாற்றுக் காலங்களைக் கணித்துவிடலாம். சேரன் செங்குட்டுவனும் கஜபாகு அரசனும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவர்கள் என்பதைப் பின்னர் விளக்குவோம். சேரன் செங்குட்டுவனுடைய வரலாற்றை ஆராய்வதற்கு முன்பு அவனுடைய முன்னோர்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், சேரன் செங்குட்டுவன் வீரமும் முயற்சியும் ஆள்வினை யும் உடைய பேரரசனாக இருந்தாலும், அவன் தானாகவே உயர் நிலையைப் பெறவில்லை. அவனுடைய பாட்டன், தந்தை, சிற்றப்பன், அண்ணன் தம்பியர் முதலிய சுற்றத்தார்களும் சேர இராச்சியத்தை வளர்த்து மேன்மைப்படுத்தியுள்ளனர். செங்குட்டுவனும் இளமைக் காலத்திலிருந்தே தந்தை, தமயன், தம்பி முதலியவர்களுடன் உடனிருந்து உழைத்துச் சேர இராச்சியத்தை வளர்த்திருக்கிறான். செங்குட்டுவன் ஆட்சிக்கு வந்த காலத்தில் சேர நாடு சிறப்புப் பெற்றிருந்ததற்கு இவனுடைய முன்னோரும் காரணமாக இருந்தனர். ஆகவே, செங்குட்டுவன் வரலாற்றைக் கூறும்போது அவனுடைய முன் னோர்களின் வரலாறுகளையும் அறிய வேண்டுவது முறையாகும். சங்க காலத்துச் சேரமன்னர்களின் முறையாக எழுதப்பட்ட வரலாறு கிடையாது, சங்க இலக்கியங்களில் அங்கும் இங்குமாகச் சில வரலாறுகள் சிதறிக் கிடக்கின்றன. பதிற்றுப்பத்து என்னும் தொகை |