பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்143

நூலில் எட்டுச் சேர அரசர்களின் வரலாறு கிடைக்கிறது. கிடைத்துள்ள சான்றுகளைக் கொண்டு செங்குட்டுவன் வரலாற்றையும் அவனுடைய உறவினர் வரலாற்றையும் ஆராய்ந்து காண்போம்.

பாட்டன் (உதியன் சேரல்)

செங்குட்டுவனுடைய பாட்டன் உதியன்சேரல் என்பவன். உதியன் சேரலின்மேல் பாடப்பட்டது பதிற்றுப்பத்து முதலாம் பத்து என்று தெரிகிறது. முதலாம் பத்து இப்போது கிடைக்க வில்லை. ஆகையால் உதியன் சேரலினுடைய முழு வரலாற்றை அறிந்து கொள்ள முடிய வில்லை. ‘நாடுகண் அகற்றிய உதியஞ் சேரல்’ என்று இவனை மாமூலனார் என்னும் புலவர் கூறுகிறார் (அகம் 65 : 5; நாடு கண் அகற்றிய நாட்டை விசாலப் படுத்திய). இதனால் இவன். சுற்றுப்புற நாடுகளை வென்று சேர இராச்சியத்தின் எல்லையை விரிவு படுத்தினான் என்பது தெரிகிறது.

உதியஞ்சேரலின் அரசியின் பெயர் நல்லினி. நல்லினி, வெளி யன் வேண்மான் என்னும் அரசனுடைய மகள். இவர்களுக்கு இரண்டு ஆண் மக்கள் பிறந்தனர். மூத்த மகன் நெடுஞ்சேரலாதன். இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்றும் கூறப்படுகிறான் (பதிற்றுப்பத்து 2ஆம் பத்து, பதிகம்). இளையமகன் பெயர் குட்டுவன். இவனைப் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்று கூறுவர். (பதிற்றுப்பத்து 3ஆம் பத்து, பதிகம்)

உதியஞ்சேரலும் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனும் ஒருவரே என்று சிலர் கருதுகின்றனர். வேறு சிலர், இவர்கள் வெவ்வேறு அரசர்கள் என்று கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சியில் இப்போது நாம் புக வேண்டுவதில்லை.

தாயாதிப் பாட்டன் (அந்துவன்)

சேரன் செங்குட்டுவனுக்குத் தாயாதிப் பாட்டன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அந்துவன் என்று பெயர். சேர அரசர் பரம் பரையில் இளைய கால்வழியில் வந்தவன் அந்துவன். அந்துவனுக்குப் பொறையன் என்றும் பெயர் உண்டு. அவன், ‘ஒருதந்தை’ என்னும் அரசனின் மகளைத் திருமணஞ் செய்திருந்தான். அவளுக்குப் ‘பொறையன் பெருந்தேவி’ என்பது பெயர்.