பக்கம் எண் :

144மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

மடியா உள்ளத்து மாற்றார்ப் பிணித்த
நெடுநுண் கேள்வி யந்துவற் கொருதந்தை
ஈன்றமகள், பொறையன் பெருந்தேவி
             (பதிற்றுப்பத்து 7ஆம் பத்து, பதிகம்)

பழைய உரையாசிரியர் ‘ஒருதந்தை’ என்பதற்கு இவ்வாறு விளக்கங் கூறுகிறார்: “இதன் பதிகத்து ‘ஒருதந்தை’ என்றது பொறையன் பெருந்தேவியின் பிதாவுடைய பெயர்.” என்று அவர் எழுதுகிறார். அந்துவன் பொறையனுக்கும் பொறையன் பெருந் தேவிக்கும் பிறந்த மகன் செல்வக் கடுங்கோ வாழியாதன் (பதிற்றுப் பத்து 7ஆம் பத்து, பதிகம்)

இந்த அந்துவன்பொறையன், ‘மடியா உள்ளத்து மாற்றார்ப் பிணித்தவன்’ என்று சொல்லப்படுகிறபடியினாலே, பகையரசருடன் போர் செய்து வென்றவன் என்று தெரிகிறான். எனவே, செங்குட்டுவனுடைய பாட்டனான உதியஞ்சேரலும், தாயாதிப் பாட்டனான அந்துவன் பொறையனும் ஒத்துழைத்துச் சேர நாட்டின் எல்லையை விரிவுபடுத்தினார்கள் என்பது தெரிகிறது.

தந்தை (நெடுஞ்சேரலாதன்)

சேரன் செங்குட்டுவனுடைய பாட்டன் உதியஞ் சேரலுக்கு இரண்டு மக்கள் இருந்தனர் என்றும் அவர்கள் நெடுஞ்சேர லாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்றும் கூறினோம். பாட்டனான உதியஞ்சேரல் எத்தனை ஆண்டு அரசாண்டான் என்பது தெரிய வில்லை. அவன் இறந்த பிறகு மூத்த மகனான நெடுஞ்சேரலாதன் சேர நாட்டை யரசாண்டான். இவனுக்கு இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் பெயரும் உண்டு. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்றும் இவனைக் கூறுவர். குமட்டூர்க் கண்ணனார் என்னும் புலவர் இவ்வரசன்மீது பதிற்றுப்பத்து இரண்டாம் பத்துப் பாடினார். 2ஆம் பத்தி லிருந்து, இவ்வரசனைப் பற்றிய சிறப்புக்களையும் செய்திகளையும் அறிந்து கொள்கிறோம்.

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் (இமய வரம்பன் நெடுஞ் சேரலாதன்) இரண்டு மனைவியரை மணஞ் செய்திருந்தான். ஒவ்வொரு மனைவிக்கும் இரண்டிரண்டு ஆண் மக்கள் பிறந்தனர். வேள் ஆவிக்கோமான் மகள் பதுமன்தேவி என்னும் மனைவி வயிற்றில்