பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்145

பிறந்தவர் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலும்(4ஆம் பத்து, பதிகம்) ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் (6ஆம் பத்து, பதிகம்) ஆவர். சோழன் மணக்கிள்ளி மகள் (நற்சோணை) வயிற்றில் கடல் பிறக்கோட்டிய செங்குட்டு வனும் (சேரன் செங்குட்டுவனும்) இளங்கோ அடிகளும் பிறந்தனர் (5ஆம் பத்து, பதிகம், சிலம்பு வரந்தருகாதை 170-183).

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய மனைவியர் இருவரில் ஒருத்தி வேள் ஆவிக்கோமான் பதுமன் தேவி என்று அறிந்தோம். அவளுடைய தங்கையை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தாயாதித் தம்பியாகிய செல்வக்கடுங்கோ வாழியாதன் மணஞ் செய்திருந்தான். அவளுக்கும் வேளாவிக் கோமான் பதுமன்தேவி என்று பெயர். (8ஆம் பத்து, பதிகம்). எனவே, இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனும் அவனுடைய தாயாதித் தம்பி செல்வக் கடுங்கோ வாழி யாதனும் முறையே தமக்கை தங்கையரைத் திருமணஞ் செய்திருந் தனர் என்பது விளங்குகிறது. செல்வக் கடுங்கோ வாழியாதன் அந்துவன் பொறையனின் மகன் என்பதை முன்னமே கூறினோம்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் செய்த போர் நிகழ்ச்சி களில் குறிப்பிடத்தக்கவை மூன்று. அவை: மேற்கடல் தீவில் இருந்து குறும்பு செய்தவர்களை வென்று அடக்கி அவர்களுடைய கடம்ப மரத்தை வெட்டியது. ஆரிய மன்னரை வென்றது. யவன அரசரை வென்று சிறைப்பிடித்தது. மேலும் இவன், சேர மன்னரின் அடையாளமாகிய வில்லின் அடையாளத்தை இமயமலையின் பாறையில் பொறித்து வைத்தான். இவற்றை விளக்கிக் கூறுவோம்.

1. சேர நாட்டுக்கு வடமேற்கே மேற்கடலில் (அரபிக் கடலில்) துளு நாட்டுக்கு உரியதான ஒரு கடல் துருத்தி (துருத்தி- தீவு) இருந்தது. அந்தத் தீவில் துளு நாட்டு நன்னனுக்கு அடங்கிய குறும்பர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்கள் காவல் மரமாகக் கடம்ப மரத்தை வளர்த்து வந்தனர். அந்தக் குறும்பர்கள் சேர மன்னருக்கு மாறாக நெடுங் காலமாகக் குறும்புசெய்துகொண்டிருந்தார்கள். வாணிகத்தின் பொருட்டுச் சேர நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுக்கு வந்துகொண்டிருந்த யவனக் கப்பல்களை வராதபடி இவர்கள் இடை மறித்துத் தடுத்துக் கொண்டிருந் தார்கள். இவ்வாறு பல காலமாகக் குறும்பு செய்துகொண்டு வந்தார்கள் என்று தெரிகிறது. கி.பி. 80-இல் இருந்த பிளினி (Pliny) என்னும் யவனர் (கிரேக்கர்) தாம் எழுதியுள்ள யவன வாணிகக் குறிப்பி