பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்147

கடல் தீவில் குறும்பு செய்து கொண்டிருந்த கப்பற் கொள்ளைக்காரர்களை வென்றவன் சேரலாதன்தான். ஆனால், அந்தக் கடற்போரை நேரில் சென்று நடத்தியவன் அவன் மகனான செங்குட்டுவனே. இதனைப் பின்னர் விளக்கமாகக் கூறுவோம். செங்குட்டுவன் இளமையிலிருந்தே தன் தந்தை, சிறிய தந்தை, தமயன் முதலியவர்களுடன் சேர்ந்து பகைவருடன் போர் செய்திருக்கிறான்.

2. நெடுஞ்சேரலாதன் மற்றும் பல போர்களைச் செய்து வென்றான் என்று குமட்டூர்க் கண்ணனார் 2ஆம் பத்தில் கூறுகிறார். இப்போர்கள் எங்கெங்கு யாருடன் நிகழ்ந்தன என்பதைக் கூறவில்லை. ஆரிய அரசரை வென்றான் என்பதை, ‘பேரிசைமரபின் ஆரியர் வணக்கி’ என்னும் பதிகத்தின் அடியினால் அறிகிறோம். தமிழகத்தின் வடக்கிலிருந்த கன்னடத் தாரையும் தெலுங்கரையும் வடவர் அல்லது வடுகர் என்றும் அவர்களுக்கப்பால் வடக்கே இருந்தவர்களை ஆரியர் என்றும் கூறுவது சங்க காலத்து மரபு. நெடுஞ்சேரலாதன் ‘ஆரியரை வணக்கினான்’ என்று கூறப்படுவதால், தக்காண தேசத்துக்கப்பால் இருந்த ஆரிய அரசருடன் போர் செய்து வென்றான் என்று அறிகிறோம். அவன் காலத்தில் தக்கண தேசத்தைச் சதகர்ணி (நூற்றுவர் கன்னர்) அரச பரம்பரையார் அரசாண்டார்கள். தக்காணத்துச் சதகர்ணியரசர்களுக்கும் சேர நாட்டுச் சேர மன்னர்களுக்கும் நெடுங்காலமாக நட்புறவு இருந்திருக்கிறது. சதகர்ணியரசன் வடநாட்டு ஆரிய அரசருடன் போர் செய்தபோது அப்போரில் அவனுக்குத் துணையாக இச்சேரன் சென்று போரை வென்றிருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. எனவே, நெடுஞ்சேரலாதன் ஆரிய அரசருடன் செய்த போர் சதகர்ணியரசருக்குச் சார்பாக வடநாட்டில் செய்த போராக இருக்க வேண்டும். அக்காலத்தில் வடநாட்டைச் சிறுசிறு மன்னர்கள்ஆண்டனர்; பேரரசர் இருந்திலர்.

வடநாட்டு அரசரை வென்றதற்கு அடையாளமாக நெடுஞ் சேரலாதன் இமயமலையில் தன்னுடைய வில் அடையாளத்தைப் பொறித்து வைத்தான். இதனை,

ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத்
தொன்று முதிர் வடவரை வணங்கவிற் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்

(அகம் 396 : 16-19)