பக்கம் எண் :

168மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

என்றும் இவன் புகழப்படுகிறான். கடற்போரில் வெற்றி பெற்ற படியால் இவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்றும் சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் என்றும் சிறப்புப் பெயர் பெற்றான்.

செங்குட்டுவனின் தமயனான களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலின் அரசாட்சிக்காலத்தில் கொங்காணத்து (துளு நாட்டு) நன்னனுடன் போர் நடந்தது. அப்போர் நிலைச் செருவாகப் பல காலம் நடந்தது. அந்தப் போரிலும் செங்குட்டுவன் தன் தமயன் சார்பாகப் போர் செய்து வெற்றி பெற்றான்.

கொங்காணத்து (துளு நாட்டு) நன்னனுடன் இவர்கள் போர் செய்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது காரணம், சேரர்களுக்கு உரியதாயிருந்த பூழி நாட்டை நன்னன் கைப்பற்றிக் கொண்டது. இரண்டாவது காரணம், சேரர், கொங்கு நாட்டின் தென் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கும் போது, நன்னன் கொங்கு நாட்டின் வடபகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டிருந் தான். நன்னனின் ஆக்கமும் உயர்வும் சேரர்களுக்கு ஆபத்தாக இருந்தது. இக்காரணங்களினால் நார்முடிச் சேரல் துளு நாட்டு நன்னனுடன் போர் செய்தான். சேரர், துளு நாட்டை மூன்று பக்கங்களிலிருந்து தாக்கினார்கள். துளு நாட்டின் தெற்குப் பக்கத்திலிருந்து நார்முடிச்சேரல் தாக்கினான். கிழக்குப் பக்கத்திலிருந்து அவன் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தாக்கினான். மேற்குப் பக்கத்தில் கடற்கரையோரமாகச் செங்குட்டுவன் தாக்கினான். துளு நாட்டு நன்னனும் சேனைப் பலமுள்ளவன். ஆகையால் அவன் இவர்களைக் கடுமையாக எதிர்த்தான். இப்போர் நிலைச்செருவாகப் பலகாலம் நடந்தது என்பதை முன்னமே கூறினோம். மேற்குக் கடற்கரைப் பக்கமாகப் போர் செய்த செங்குட்டுவன் துளு நாட்டுக் கடற்கரைப் பக்கத்திலிருந்த வியலூர், கொடுகூர் என்னும் ஊர்களை வென்று கைப்பற்றினான்.

உறுபுலி அன்ன வயவர் வீழச்
சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறி
அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து

(பதிற்று. 5ஆம் பத்து, பதிகம்)

என்று பரணரும்,