| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 169 |
கறிவளர் சிலம்பில் துஞ்சும் யானையின் சிறுகுரல் நெய்தல் வியலூர் எறிந்தபின் (சிலம்பு 28 : 114 - 115) என்று இளங்கோவடிகளும் இச்செய்தியைக் கூறுகிறார்கள். வியலூர் துளு நாட்டில் இருந்தது என்பதை மாமூலனார் என்னும் புலவர், அகவுநர்ப் புரந்த அன்பிற் கழல்தொடி நறவுமகி ழிருக்கை நன்னன் வேண்மான் வயலை வேலி வியலூர் (அகம் 97 : 11-13) என்று கூறினார். சேர அரசர்கள் கொங்கு நாட்டைக் கொஞ்சங் கொஞ்சமாகக் கைப்பற்றினார்கள் என்று முன்னமே கூறினோம். கொங்கு நாட்டில் பேரரசன் இல்லாமல் சிறுசிறு குறுநில மன்னர்கள் இருந்தபடியால் அவர்களைச் சேரர் எளிதாக வென்று அந் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது சோழ பாண்டிய அரசர் வாளா இருக்கவில்லை. கொங்கு நாட்டுச் சிற்றரசர்களுக்கு உதவியாக இருந்து சோழரும் பாண்டியரும், சேரர் கொங்கு நாட்டைக் கைப்பற்றாதபடி தடுத்து வந்தார்கள். அதனால் சோழ பாண்டியருடன் சேர அரசர் போர் செய்ய வேண்டியதாயிற்று. செங்குட்டுவனுடைய பங்காளித் தமயனான தகடூர் எறிந்த பெருஞ் சேரலிரும்பொறை கொங்கு நாட்டைக் கைப்பற்றிக் கொண்டிருந்த போது, சோழ பாண்டியர் கொங்கருடன் ஒன்று சேர்ந்து அவனை எதிர்த்தார்கள். அப்போது செங்குட்டுவன், அண்ணனான பெருஞ்சேரலிரும் பொறைக்கு உதவியாகச் சென்று சோழ பாண்டியருடன் போர் செய்து வென்றான். இச்செய்தியை இளங்கோவடிகள், நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக் கொங்கர் செங்களத்துக் கொடுவரிக் கயற்கொடி பகைபுறத்துத் தந்தனர் ஆயினும் ஆங்கவை திசைமுக வேழத்தின் செவியகம் புக்கன (சிலம்பு 25 : 152 - 158) என்றும், |