| 170 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர் பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் வடவாரிய ரொடு வண்டமிழ் மயக்கத்துன் கடமலை வேட்டம் கட்புலம் பிரியாது (சிலம்பு 25 : 156-159) என்றும் அமைச்சனாகிய வில்லவன் கோதை கூறியதாகச் சிலப்பதிகாரம் கூறுவது காண்க. இப்போரில் கொங்கணர், கலிங்கர், கருநாடர், பங்களர், கங்கர், கட்டியர், ஆரியர் ஆகிய பல நாட்டு வீரர்கள் போர் செய்தது கூறப்படுகிறது. இதில் கூறப்பட்ட பங்களர், கட்டியர், கங்கர் என்பவர்கள் அக்காலத்துத் தமிழகத்தின் எல்லைப் புறத்தில் இருந்தவராவர். பங்களர் என்பவர் பங்கள நாட்டவர். பங்கள நாடு, வேங்கடமலைக்கு மேற்கே இருந்த தமிழகத்தின் எல்லைப்புற நாடு. பங்கள நாட்டைப் பற்றிய சாசன எழுத்துக்கள் சில தமிழில் கிடைத்துள்ளன. இந்தப் பங்களரைப் பங்களார் (வங்காளர்) என்று தவறாகக் கருதிக் கொண்டு பங்காளர் என்னும் பெயரைக் கூறுகிற சிலப்பதிகாரம் பிற்காலத்தில் எழுதப்பட்ட நூல், சங்ககாலத்து நூல் அன்று என்று பிழையான கருத்தைத் திரு. வையாபுரிப் பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி போன்ற அறிஞர்கள் தவறாக எழுதியுள்ளார்கள் (இவர்களின் தவறான முடிபை முன்பு ஒரு கட்டுரையில் மறுத்து எழுதியிருக்கிறேன்). செங்குட்டுவன் செய்த போர்களில் மற்றொரு போர், பேர்பெற்ற மோகூர்ப் போர். மோகூர் என்பது பாண்டி நாட்டில் மதுரைக்கு வடகிழக்கே 7 மைல் தூரத்தில் இருக்கிறது. இது பிற்காலத்தில் வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகத் திருமோகூர் என்று பெயர் பெற்று விளங்குகிறது. மோகூரைப் பழையன் என்னும் குடிப் பெயரையுடைய சிற்றரசர் பரம்பரையாக ஆண்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் பாண்டிய அரசர்களின் சேனைத் தலைவராக இருந்தவர்கள். அந்தப் பழையர்களில் ஒருவன் அறுகை என்னும் வீரனை வென்று புகழ் பெற்றிருந்தான். தோல்வி யடைந்த அறுகையின் சார்பாகச் செங்குட்டுவன் மோகூரின் மேல் படையெடுத்துச் சென்று, பழையனுடன் போர் செய்து வென்று, அவனுடைய காவல்மரமாக இருந்த வேப்பமரத்தை வெட்டி, அதனால் முரசு செய்தான். |