பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்187

என்று புறப்பட்டு வந்த காலத்தைக் கூறினான். செங்குட்டுவன், கண்ணகிக் கோட்டத்தைக் காணச் சென்றபோது இவனும் உடன் சென்றான் (சிலம்பு - நடுகல்: 222).

செங்குட்டுவன் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் பேரரசனாக இவன் இருந்தான். பத்தினிப் படிவம் அமைப்பதற்குக் கல் கொண்டு வர இமயம் போக வேண்டியதில்லை, வடநாட்டரச ருக்குத் திருமுகக் கடிதம் எழுதினால் அவர்கள் கல்லை எடுத்து அனுப்புவார்கள் என்று செங்குட்டுவனுக்குக் கூறிய அவன் அமைச்சனான வில்லவன் கோதை, சேர சோழ பாண்டியன் ஆகிய மூவேந்தரின் முத்திரைகளை இட்டுக் கடிதம் எழுதும்படி கூறினான்.

வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம்
தென்தமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி
மண்தலை யேற்ற வரைக ஈங்கென

(சிலம்பு - காட்சி: 170 - 172)

(மண்தலை ஏற்ற - இலச்சினை மண் (முத்திரை) ஏற்ற ஓலைகளை.)

இவ்வாறு இவன் கூறியது, சோழ பாண்டியருக்கும் மேம்பட்ட சிறப்பைச் செங்குட்டுவன் பெற்றிருந்தான் என்பதைத் தெரிவிக்கிறது. இது வெற்றுப் புகழ்ச்சியன்று, உண்மை நிலையே என்பது சரித்திரத்தை யாராய்ந்து பார்த்தால் தெரிகிறது.

துளு நாடாகிய கொங்கண நாடு இவன் ஆட்சிக்கு அடங்கி யிருந்தது. மோகூர்ப் பழையனுடன்செங்குட்டுவன் செய்த போரில் மோகூர்ப் பழையனுக்குத் துணையாகச் சோழ அரசனும் பாண்டிய அரசனும் வந்து செங்குட்டுவனை எதிர்த்துத் தோற்றார்கள். மேலும், சோழன் கிள்ளிவளவன் ஆட்சி ஏற்ற போது, சோழர் குடியிற் பிறந்த ஒன்பது அரசர் அவனை எதிர்த்துப் போராடி உள்நாட்டுக் குழப்பத்தை உண்டாக்கிச் சோழ நாட்டின் அமைதியைக் கெடுத்தார்கள். அப்போதும் செங்குட்டுவன், கிள்ளிவளவன் சார்பாக ஒன்பது அரசருடன் போர் செய்து வென்று கிள்ளிவளவனுக்குச் சோழ ஆட்சியைக் கொடுத்தான் (இவைகளை முன்னமே கூறியுள்ளோம்) இவை யெல்லாம், செங்குட்டுவன் சோழ பாண்டிய அரசரைவிட மேம் பட்டிருந்தான் என்பதைத் தெரிவிக்கின்றன. மேலும் இவன், அக்காலத்துப் பேரரசனாக விளங்கிய நூற்றவர் கன்னர், (சதகர்ணி)