பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்241

என்பது சரித்திரம் அறிந்தவர்கள் நன்கறிவார்கள். தேவனாம்பிய என்னும் பாலி மொழிச் சொல் சமஸ்கிருத மொழியில் `தேவனாம்பிரிய’ என்றாகும். தேவனாம் பிரியன் என்றால் தேவர்களுக்குப் பிரிய மானவன் என்பது பொருள். அசோகச் சக்கரவர்த்தியின் சாசனங் களிலே தேவனாம்பிய என்னும் பெயர் அவருக்கு வழங்கப்பட்டிருப் பதைக் காண் கிறோம். இலங்கையில் வழங்குகின்ற மகாவம்சம் என்னும் நூலிலும் அசோகச் சக்கரவர்த்தி `தேவனாம்பிய’ என்று கூறப் பட்டிருக்கிறார். அசோகச் சக்கரவர்த்தி, பௌத்தப் பிக்குகளைத் தமிழகம், இலங்கை முதலிய தேசங்களிலே அனுப்பிப் பௌத்த மதத்தைப் பரவச்செய்தார் என்பது சரித்திர உண்மை. அசோகச் சக்கர வர்த்தியின் பாறைக்கற் சாசனங்களில் இரண்டாவதும் பதின் மூன்றாவதும் (Inscriptions of Asoka, Rock Edicts II and XIII) இச்செய்தியைத் தெளிவாகச் சந்தேகம் இல்லாமல் கூறுகின்றன. இந்தச் சாசனங்களில் தேவனாம் பிரியராகிய அசோகச் சக்ரவர்த்தி, சேர அரசர்களைக் கேரள புத்த (கேரள புத்திரர்) என்று கூறுகிறார்.

அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் இலங்கையை யரசாண்ட அரசன் திஸ்ஸன் என்பவன். இவன் அசோகருடன் நட்பு உடைய வன். இவன் அசோகரைப் போலவே தானும் `தேவனாம்பிய’ (தேவனாம் பிரியன்) என்று பெயர் சூட்டிக்கொண்டான். அவனுக்குப் பிறகு வந்த சில இலங்கையரசர்களும் தங்கள் பெயருடன் தேவனாம்பிய என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டிக் கொண்டனர். அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் இந்தச் சேர வேந்தர்களும் அவருடன் நட்புக் கொண்டிருந் தார்கள் என்பது, அசோகச் சாசனங்கள் அவர்களைக் ‘கேரள புத்திரன்’ என்று கூறுவதிலிருந்து அறியலாம். அசோகச் சக்கரவர்த்தியுடன் நட்பு முறையில் இருந்த சேர மன்னர்கள் அவரைப் போலவே, தங்களையும் `தேவனாம்பிரியா’ என்று கூறிக்கொள்ள விரும்பி, அப்பெயரைத் தமிழாக்கி இமயவரன்பன், வானவரன்பன் (= தேவனாம்பிரியன்) என்று வைத்துக் கொண்டார்கள் போலும் (சோழ, பாண்டியர் இப்பெயரைச் சூட்டிக்கொள்ளவில்லை)

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் சேர அரசர் தங்களுக்குச் சிறப்புப் பெயராகச் சூட்டிக் கொண்ட வானவர் அன்பன், இமயவர் அன்பன் என்னும் பெயர்கள், இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு (கடைச் சங்க காலத்தின் இறுதியில்)