பக்கம் எண் :

250மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

கருதிவிடுகின்றனர். ஆகவே, இந்நிகழ்ச்சி கட்டுக்கதை என்று கூறுகின்றனர்.

கோவலன் கொலை, கண்ணகியின் முடிவு, மாதரி தீயில் விழுந்து இறந்தது, கவுந்தியார் பட்டினி கிடந்து இறந்தது, மாசாத்துவான், மாநாய்கன், மாதவி முதலியோரின் துறவு, கண்ணகி கோவலரின் தாய்மார் தீரா மனக் கவலையினால் உயிர்விட்டது முதலிய எல்லாம் சேர்ந்து துன்பியலாக முடிகிற இந்த நிகழ்ச்சியை முழுதும் துன்பிய லாகக் காட்டாமல், கோவலன், பாண்டியன் இவர்கள் இறந்தமை மட்டுங் கூறி மற்ற அவலச் சுவைகளைக் குறிப்பாகக் கூறி, இடையிடையே இசை நிகழ்ச்சி, கூத்து நிகழ்ச்சிகளைப் புகுத்தி இக்காவியத்தை மிகச் சிறப்பாக முடித்திருக்கிறார் இளங்கோ அடிகள். இவர் சமண சமயத்தவ ராக இருந்தும், சமயக் காழ்ப்பு இல்லாமல், ஏனைய மதங்களைக் கூறகிற இடத்தில் அந்த மதங்களைச் சிறப்பாகக் கூறுகிறார்.

மணிமேகலை:

மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் இயற்றிய மணிமேகலைக் காவியத்தைப் பார்ப்போம். இந்தக் காவியத் தலைவி மணிமேகலை. கோவலனின் காமக் கிழத்தியாகிய இசைக்கலை நாடகக் கலை களினால் புகழ்பெற்ற மாதவியின் மகள் இவள். மாதவி இசைக்கலை, நாட்டியக் கலை, பதினோராடல் முதலிய கலை களையெல்லாங் கற்றுச் சோழ னுடைய அவையில் அரங்கேறித் ‘தலைக்கோலி’ என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவள். புகார் நகரத்துச் சீமானாகிய கோவலன் அவளுடைய கலைகளில் ஈடுபட்டுத் தன் மனைவியாகிய கண்ணகி யையும்விட்டு இவளிடத் திலேயே தங்கிவிட்டான். இவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தை தான் மணிமேகலை. கோவலன் மாதவியரின் இன்பகரமான வாழ்க்கை பன்னிரண்டு யாண்டு இனிது கழிந்தது. குமாரி மணிமேகலை வளர்ந்து பன்னிரண்டு வயதடைந்தாள். அவளும் இசைக்கலை, நாட்டியக் கலைகளைப் பயனிறு அரங்கேறும் நிலையில் இருந்தாள். காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் நடந்த இந்திர விழாக் காலத்தில் மாதவி நகர அரங்க மேடையில் ஏறி நடன நாட்டியங்களையும் ஆடல் பாடல்களையும் நிகழ்த்துவது வழக்கம்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஊழ்வினைப் பயனாகக் கோவலன், மாதவியைப் பிரிந்து மதுரைக்குப் போய்க் கொலை யுண்டிறந்தான், அவன் இறந்ததைக் கேட்டுத் துன்பமடைந்தாள் மாதவி.