பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்251

தான் கணிகையர் குலத்தில் பிறந்தவளாக இருந்தும் கற்புடைய மங்கையாகவே அவள் இருந்தாள். கோவலன் இறந்த பிறகு, தான் பயின்றிருந்த நாடகக் கலையை நிறுத்திவிட்டு, பக்தி வாழ்க்கையில் ஈடுபட்டாள். அதுமட்டும் தன் மகளான மணி மேகலையையும் கணிகையர் வாழ்க்கையிலிருந்து விலக்கிக் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுத்த உறுதிகொண்டாள். ஆனால், இதற்கு இடையூறாக இருந்தாள் இவளுடைய தாயாகிய சித்திராபதி.

மாதவியின் தாயாகிய சித்திராபதி, கணிகையர் வாழ்க்கையைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்னும் கருத்துடையவள். வண்டுகளும் வண்ணத்துப்பூச்சிகளும் பூக்களில் சென்று தேனை உறிஞ்சுவது போல, கணிகையராகப் பிறந்தவர் செல்வர்களின் பொருளை உறிஞ்சி வாழ வேண்டும் என்னும் கொள்கையுடை யவள். ஆகவே, சித்திராபதி தன் மகளான மாதவியை மீண்டும் கணிகையர் வாழ்க்கையில் புகுத்த வேண்டும் என்று முயற்சி செய்தாள். மேலும், தன் பேர்த்தியாகிய மணி மேகலையை நாடக அரங்கேற்றித் தலைக்கோலிப் பட்டம் பெறச் செய்து, அவளையும் கணிகையர் வாழ்க்கையில் புகுத்திப் பொருள் திரட்ட வேண்டும் என்னும் விருப்பம் உடையவளாக இருந்தாள்.

அந்த ஆண்டு (கோவலன் மதுரையில் கொலையுண்டபிறகு அடுத்த ஆண்டு), வழக்கம்போலக் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழா நடந்தது. விழாக் காலத்தில் மாதவியின் ஆடல் பாடல்கள் நிகழாமல் இந்திரவிழா சிறப்படைவதில்லை. வழக்கம் போல நகர மக்கள் மாதவியை நாடக மேடையில் எதிர்பார்த்தனர். ஆனால், மாதவியோ ‘இனி மேடை ஏறுவதில்லை’ என்று தீர்மானித்துவிட்டாள். தன் மகளான மணிமேகலையைக் கணிகையர் வாழ்க்கையில் புகுத்தாமல் அவளை நல்லவருக்கு மணஞ் செய்து கொடுத்துக் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுத்தவும் உறுதிகொண்டாள். ஆகவே, மாதவி இந்திரவிழாவின்போது அரங்கத்துக்குப் போகாமல் இருந்துவிட்டாள்.

தாயாகிய சித்திராபதி, அரங்கம் ஏறி ஆடல் பாடல் நிகழ்த்தும்படி தன் மகளை வற்புறுத்தினாள். மாதவி போகவில்லை. சித்திராபதி மேலும் வற்புறுத்தவே, மாதவி தான் சித்திராபதியிடம் இருக்கும் வரையில் தன் எண்ணம் நிறைவேறாது என்று கருதித் தன் மகளான மணிமேகலையுடன் பௌத்தப் பள்ளிக்குப் போய்விட்டாள். பௌத்தப் பள்ளியில் இருந்த பிக்குகளின் தலைவரான பேர்பெற்ற அறவண