பக்கம் எண் :

252மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

அடிகள் இடஞ்சென்று தானும் தன் மகளும் நல்வாழ்க்கையில் ஈடுபடப் போவதைத் தெரிவித்துத் தங்களைப் பௌத்த மதத்தில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டினாள். அறவண அடிகள் மாதவிக்கும் மணி மேகலைக்கும் திரிசரணம், பஞ்சசீலங்களைக் கொடுத்துப் பௌத்த மதத்தில் சேர்த்துக்கொண்டார். கடைசி முறையாகச் சித்திராபதி, வயந்த மாலை என்பவளை மாதவியிடம் அனுப்பி அரங்கமேடைக்கு வந்து ஆடல் நிகழ்த்துமாறு கேட்டாள். மாதவி கண்டிப்பாக மறுத்துவிட்டாள்.

மாதவி தன் கருத்துக்கு இணங்காமற்போகவே, சித்திராபதி தன் பேர்த்தியாகிய மணிமேகலையை எப்படியாவது தன் வசப்படுத்தி அவளைக் கணிகையர் வாழ்க்கையில் புகுத்த வேண்டும் என்று முயன்றாள். சோழ அரசன் மகனான உதய குமாரன், மணிமேகலையின் மேல் காதல் கொண்டிருப்பதை யறிந்து அவனிடஞ் சென்று மணி மேகலையைக் கைப்பற்றும்படி தூண்டினாள். ஒரு நாள் மாலை வேளையில் மணிமேகலை, சுதமதி என்பவளுடன் உவவனம் என்னும் பூஞ்சோலைக்குப் போனாள். அவள் அங்குச் சென்றதை அறிந்த உதய குமாரன் தன் தேரை ஓட்டிக்கொண்டு அங்கே போனான். அவன் வந்ததைக் கண்ட மணிமேகலை அவன் தன்னைக் கைப்பற்ற வந்திருக்கிறான் என்பதை அறிந்து அத்தோட்டத்தில் இருந்த புத்தபாத பீடிகையுள்ள பளிங்கறை மண்டபத்தில் போய் ஒளிந்து கொண்டாள். உதயகுமரன், பௌத்தர்களுடைய இத்தோட்டத்தில் தான் ஒன்றுஞ் செய்யக்கூடாது என்று எண்ணி அங்கே நின்றிருந்த சுதமதியிடம் சென்று, ‘மணிமேகலை கணிகைக் குலப் பெண், அவள் பௌத்த மதத்தில் சேர்ந்தாலும் நான் அவளை விடப்போவதில்லை. அவள் பாட்டி சித்திராபதியின் மூலமாக நான் அவளை அடை வேன்’ என்று சொல்லிப் போய்விட்டான்.

அவன் போன பிறகு வெளியே வந்த மணிமேகலையிடம் சுதமதி அவன் சொல்லியவற்றைக் கூறினாள். இளம் பெண் ணாகிய மணிமேகலை, தன் மனமும் அவனை நாடுகிறது என்று சுதமதிக்குச் சொன்னாள். ஆனால், உதயகுமாரனுடைய எண்ணம் அவளை மணஞ் செய்து கொள்வது அன்று. அவளைக் காமக் கிழத்தியாக, ஒரு விளையாட்டுக் கருவியாகப் பயன்படுத்துவதே அவன் நோக்கம். மாதவியின் எண்ணமோ மணிமேகலையைக் கற்பொழுக்கமுள்ள குடும்ப வாழ்க்கையில் அமைக்க வேண்டும் என்பது. இதை மணிமேகலையும் நன்றாக அறிந்திருந்தாள்.