பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்263

பயன்படும்). வேறு சான்றுகள் இருக்கும்போது அவைகளையெல்லாம் பயன்படுத்தாமல், வெறும் சொல்லைக் காட்டிக் காலங்கணிப்பது தவறான முடிவுக்குக் கொண்டு போய்விடும். இதற்குக் சான்றாக ஒன்றைக் காட்டுவோம்.

அரசர் போர்க்களத்தில் போய்ப் போர் செய்து மார்பில் புண்தழும்பு (விழுப்புண்) படாமல் இறந்து போவார்களானால், அவர்களை அடக்கஞ் செய்வதற்கு முன்பு, தருப்பைப்புல்லில் கிடத்திப் பிராமணர் கத்தியால் மார்பில் வெட்டிப் புண் உண்டாக்கிப் பிறகு அடக்கம் செய்யும் வழக்கம் சங்க காலத்தில் இருந்தது. இந்த வழக்கத்தைச் சங்க காலத்தில் இருந்த ஒளவையாரும் அவர் காலத்திலிருந்த கூலவாணிகன் சாத்தனாரும் கூறியுள்ளனர்.

அதிகமான் நெடுமான் அஞ்சியின் தகடூரின்மேல் பெருஞ் சேரலாதன் படையெடுத்து வந்து போர் செய்தான். அந்தப் போரில் நெடுமான் அஞ்சி மார்பில் புண்பட்டான். அதனைக் கண்ட ஒளவையார், அவன் விழுப்புண் பட்டதைச் சிறப்பித்துப் பாடினார் (புறம் 93). அந்த பாட்டில், விழுப்புண் பெறாமல் இறந்தவர் தருப்பையில் கிடத்தி மார்பை வெட்டப்படுவர் என்பதைக் குறிப்பிடுகிறார்.

அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி
மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த
நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கென
வாள் போழ்ந் தடக்கலும் உய்ந்தனர் மாதோ.          (புறம் 93 : 7-11)

என்று அவர் கூறியுள்ளார்.

இதே செய்தியைக் கூலவாணிகன் சாத்தனாரும் தமது மணிமேகலை நூலில் கூறுகிறார். மணிமேகலை சிறை விடுகாதையில்,

கொற்றங் கொண்டு குடிபுறங் காத்துச்
செற்ற தெவ்வர் தேஎந்தம தாக்கியும்
தருப்பையிற் கிடத்தி வாளிற் போழ்ந்து
செருப்புகல் மன்னர் செல்வுழிச் செல்கென
மூத்து விளிதல்இக் குடிப்பிறந் தோர்க்கு
நாப்புடை பெயராது தாணுத்தக வுடைத்தே

(மணி. 23 : 11-16)