பக்கம் எண் :

264மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

இச்செய்யுள்களில் ஒளவையார் தர்ப்பைப்புல்லைப் பசும்புல் என்றும், சாத்தனார் தருப்பை என்றும் கூறியுள்ளனர். இதைச் சுட்டிக் காட்டி திரு. பி.டி. சீநிவாச அய்யங்கார், புல் என்னுஞ் சொல்லையாளும் ஒளவையார் காலத்தினால் முந்தியவர் என்றும் தருப்பை என்னும் வடமொழிச் சொல்லை யாளுகிற சாத்தனார் காலத்தினால் பிற்பட்டவர் என்றும் தாம் எழுதிய `தமிழர் சரித்திரத்தில்’ கூறியிருக்கிறார். (P.T. Srinivasa Iyengar, History of the Tamils, 1929, pp. 480-481) மேற்போக்காகப் பார்க்கிறவர்களுக்கு இது உண்மை போலத் தோன்றும். ஆனால், இது உண்மைக்கு மாறான தவறுள்ள முடிவு. வெறுஞ் சொல்லை மட்டும் ஆராய்ந்து முடிவு கட்டுவது, வழுக்கு நிலத்தில் சருக்கி விழுவது போன்ற ஆபத்தானதாகும்.

முறைப்படி நேர்மையாக ஆராய்ந்து பார்த்தால், ஒளவை யாரும் சாத்தனாரும் சம காலத்தில், சங்க காலத்தில் வாழ்ந் திருந்தவர் என்பது தெரிகிறது. ஒளவையார், தகடூர், அரசன் அதிகமான் நெடுமான் அஞ்சியால் ஆதரிக்கப் பெற்றவர். தகடூரின் மேல் பெருஞ்சேரலிரும் பொறை படையெடுத்து வந்தபோது அப்போரில் நெடுமான் அஞ்சி புண்பட்டதை நேரில் கண்டு பாடினவர். தகடூர்ப் போர் செய்த பெருஞ் சேரலிரும்பொறை, சேரன் செங்குட்டுவனுடைய தாயாதியண்ணன், செங்குட்டு வனுக்கும் அவன் தம்பியாகிய இளங்கோவடிகளுக்கும் சாத்தனார் நெருங்கிய நண்பர். எனவே, ஒளவையாரும் சாத்தனாரும் இளங்கோவடிகளும் செங்குட்டுவனும் தகடூர் எறிந்த பெருஞ் சேரலிரும் பொறையும் அதிகமான் நெடுமான் அஞ்சியும் சமகாலத் தில் இருந்தவர் என்பது தெளிவான ஆராய்ச்சி காட்டும் முடிவு. ஆனால், பி.டி.சீநிவாக ஐயங்கார் தருப்பை, புல் என்னும் சொல்லாராய்ச்சியில் புகுந்து சருக்கி விழுந்து இரு புலவரும் (ஒளவையாரும் சாத்தனாரும்) வெவ்வேறு காலத்திலிருந்தவர் என்று முடிவு கட்டுகிறார். சொல்லாராய்ச்சி எவ்வளவு ஆபத் தானது பாருங்கள்.

நம்முடைய கண்ணெதிரிலே இக்காலத்தில் சிலர் திங்கள் என்னும் சொல்லையும் சிலர் மாதம் என்னும் சொல்லையும் வழங்கி வருவதைப் பார்க்கிறோம். இவ்வாறு வழங்கும் இச் சொற்களை எடுத்துக்கொண்டு காலத்தை ஆராய்ந்து பார்த்தால், சீநிவாச அய்யங்காரின் ஆராய்ச்சிப்படி, திங்கள் என்னும் சொல்லை