பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்265

வழங்குகின்றவர் முற்காலத்தில் இருந்தவர் என்றும் மாதம் என்னும் சொல்லை வழங்குகிறவர் பிற்காலத்தில் இருந்தவர் என்றும் முடிவு கட்ட வேண்டும். அப்படிக் கூறுவது, அய்யங்கார் வழுக்கி விழுந்தது போன்ற தவறான முடிவாகும். ஏனென்றால், இச்சொற்களையெல்லாம் வழங்குகிறவர்கள் நம் காலத்தில் வாழ்கிறவர்களே.

சமீபகாலத்தில் இருந்த மறைமலை அடிகளும் வடுவூர் துரைசாமி அய்யங்காரும் சம காலத்தில் இருந்தவர்கள் என்பதை நாம் அறிவோம். அவர்களுடைய நூல் நடையைக் கொண்டு அவர்கள் காலத்தை, சீநிவாச அய்யங்கார் ஆராய்ச்சியைப் பின்பற்றி ஆராய்ந்து மறைமலையடிகள் சில நூற்றாண்டுகளுக்கு முன் இருந்தவர், துரைசாமி அய்யங்கார் சில நூற்றாண்டு களுக்குப் பின் இருந்தவர் என்று முடிவுகட்டினால் அது உண்மைக்கு மாறுபட்ட தவறான முடிவாகும் அல்லவா?

சீநிவாச அய்யங்காரின் இத்தகைய சொல்லாராய்ச்சி ஏற்கத்தக் கதன்று. காலத்தை ஆராய்வதற்கு வேறு நல்ல சான்றுகளைக் கைக்கொண்டு ஆராயாமல், வழுக்கி விழச் செய்கிற சொல்லா ராய்ச்சியைக் கொள்வது இவ்வாறு பிழைபட்ட முடிவுக்குத்தான் கொண்டு போய்விடும். வையாபுரிப்பிள்ளை போன்ற வேறு சில ஆராய்ச்சிக் காரர்களும் நல்ல சான்றுகளை விட்டுவிட்டுச் சொற்களை மட்டும் ஆராய்ந்து இலக்கியக் காலத்தைத் தவறாக முடிவு கட்டியுள்ளனர்.

ஒளவையாரும் சாத்தனாரும் புல், தருப்பை என்னும் சொற்களைக் கையாண்டதற்கு வேறு தக்க காரணம் உண்டு. அதுவென்னவென்றால், ஒளவையார் தமிழை மட்டும் கற்றுத் தமிழ் மரபு வழுவாமல் நூல் இயற்றியவர். சாத்தனாரோ, பௌத்த மதத்தைத் தழுவிய தமிழர். அவர் தமிழுடன், அக்காலத்துப் பௌத்தரின் வழக்கப்படி பாலி மொழியை யும் அதனுடன் சமஸ்கிருத மொழியையும் கற்றவர். அன்றியும், பழைய முறையைக் கடந்து தமிழ் இலக்கியத்தில் காவியம் இயற்றும் புதிய மரபை யுண்டாக்கியவர் (இவர் காலத்திலேயே இவருடைய நண்பரான இளங்கோவடிகள் சிலப்பதிகாரக் காவியத்தை இயற்றினார்.) தமிழில் காவியம் இல்லாத காலத்தில், முதன் முதலாகச் சாத்தனாரே மணிமேகலைக் காவியத்தை இயற்றினார். வெறுங் காவியத்தை மட்டும் இயற்றுவது சாத்தனாரின் நோக்கம் அன்று. அதில் பௌத்த மதப் பிரசாரத்தையும் கருதி எல்லோருக்கும் விளங்க வேண்டுமென்னும் நோக்கத்தோடு எளிய நடையிலும் மணிமேகலையை இயற்றினார்.