266 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
புல், தருப்பை என்னும் சொற்களை ஒளவையாரும் சாத்தனாரும் கையாண்டதன் உண்மை இதுவாகும். புல் என்பதைவிட தருப்பை என்று கூறினால் எளிதில் கருதப்பட்ட பொருள் இனிது விளங்கும். சீநிவாச அய்யங்கார் கூறுவது போல முற்காலம், பிற்காலம் என்னும் வேறுபாட்டினால் அன்று. எனவே, ஒளவையாரைப் போலவே, மணிமேகலையை இயற்றிய சாத்தனாரும் சங்க காலத்தில் இருந்தவரே. வடமொழிக் கலப்பு சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் வடமொழிச் சொற்கள் கலந்திருப்பதை எடுத்துக்காட்டி இவ்விரு காவியங் களும் சங்க காலத்துக் காவியங்கள் அல்ல, பிற்காலத்தவை என்று வையாபுரி பிள்ளை, நீலகண்ட, சாஸ்திரி போன்ற சிலர் கூறுகின்றனர். இவர்கள் கூறுவது மேற்பார்வைக்கு உண்மை போலத் தோன்றுகிறது. அகநானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை நானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து முதலிய சங்க இலக்கியங்களுக்கும் மணிமேகலை, சிலப்பதிகார நூல்களுக்கும் மொழிநடையில் அதிக வேற்றுமை காணப் படுகின்றன என்பதும் மணிமேகலை, சிலப்பதிகாரக் காவியங்களில் பிராகிருதச் சொற்களும் வடமொழிச் சொற்களும் அதிகமாகக் காணப்படுகின்றன என்பதும் உண்மை தான். இக்காரணம் பற்றி இவர்கள் கூறுவதுபோல, இந்நூல்கள் பிற்கால நூல்கள் என்று ஒப்புக் கொள்ள முடியுமா? சொற்களை மட்டுங் கொண்டு ஆராய்ந்து காலங் கணிப்பது வழுக்கு நிலத்தில் போய்ச் சருக்கி விழுவதற்குச் சமானமாகும் என்று முன்னமே கூறினோம். சரித்திரத்தைத் துணையாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால், வையாபுரியார்களின் முடிவுகள் பெருந் தவறுடையன என்பது தெரியும். கடைச்சங்க காலத்திலே பௌத்த மதமும் ஜைன (சமண) மதமும் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டன. கி.மு. மூன்றாம் நூற் றாண்டில் இருந்த அசோகச் சக்கரவர்த்தியின் சாசனங்களில் இரண்டு சாசனங்கள், அவர் காலத்தில் பௌத்த மதத்துப் பிக்குகள், தமிழ்நாட்டுக்கு வந்ததைத் திட்டமாகக் கூறுகின்றன. அசோகச் சக்கரவர்த்தியுடைய பாட்டனான சந்திரகுப்த மௌரியன் காலத்தில் சமண மதத் (ஜைன மதத்) துறவிகள் தமிழ்நாட்டுக்கு வந்த செய்தியையும் சரித்திரத்தினால் அறிகி றோம். இந்த வரலாற்று உண்மையில் சிறிதும் ஐயமில்லை. |