பக்கம் எண் :

268மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

கிறார்கள். ஆனால், அடியோடு பிற மொழிச் சொற்களைக் கலக்காமல் இருக்கச் செய்ய முடியாது. பேச்சு வழக்கற்றுப்போன ஏட்டு மொழிகளிலேயும் பிற மொழிச் சொற்கலப்பு ஏற்படுகிறது என்றால், பேச்சு வழக்கில் உள்ள மொழிகளில் பிற மொழிச் சொற்கள் கலப்பதைத் தடுக்க இயலுமோ? ஆகவே, சங்க காலத் தமிழகத்திலேயும் பிற மொழிக் கலப்பு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. வையாபுரியார்கள் கூறுவது போலக் ‘கலப்புக் காலம்’ வரட்டும். என்று காத்துக் கொண்டிருந்து சிலநூற்றாண்டுகள் கழிந்த பிறகு பிற மொழிக் கலப்பு நுழையவில்லை.

ஆனால், மேலே கூறியபடி, சங்கத் தொகை நூற்செய்யுள் களில் பிற மொழிக் கலப்பு வெகு குறைவாகவும் மணிமேகலை, சிலப்பதிகாரக் காவியங்களில் கலப்பு அதிகமாகவும் இருப்பதைக் காண்கிறோம். தொகை நூல்களில் பிற மொழிச் சொற்கள் மிகக் குறைவாக இருப்பதன் காரணம் என்னவென்றால், அச்செய்யுட்கள் பிறமொழிச் சொற்கள் இல்லாமலே தாய்மொழியிலேயே கருத்துக்களைத் தெரிவிக்கும் விஷயங்களைக் கொண்டவை. மேலும், பிற மொழிகளைக் கற்காமல் தாய்மொழியை மட்டும் கற்றவர்களால் பாடப்பெற்றவை. மணிமேகலை, சிலப்பதிகார நூல்கள் அவ்வாறில்லாமல் பிற மதச் சார்புள்ள கருத்துக் களைக் கூறவேண்டியிருந்தபடியாலும் புதுமைக் கருத்துக்களைக் கூறவேண்டியிருந்தபடியாலும், இந்நூல்களில் பிராகிருத மொழிச் சொற்களும் வடமொழிச் சொற்களும் அதிகமாகக் காணப் படுகின்றன. இதுவே, வரலாற்று முறைப்படி நாம் அறியக் கிடக்கும் உண்மை.

எனவே, வையாபுரியார்கள் கூறுவதுபோல, சங்ககாலம் கழிந்து வேறு காலம் வந்தபிறகு இயற்றப்பட்ட நூல்கள் இவை என்று கருதுவது பெரிய தவறாகும். ஆகையால், சிலப்பதிகார, மணிமேகலை நூல்கள் கடைச்சங்க காலத்தின் இறுதியில் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில்), செங்குட்டுவன் காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை.

இலக்கிய நூல்கள்

சேரன் செங்குட்டுவன் வாழ்ந்திருந்த காலத்தில் தமிழிலக்கியத் தில் புதுவகையான நூல்கள் தோன்றின. சிறுசிறு குறும்பாடல்கள் பாடப் படுவது இவனுக்கு முன்பிருந்த வழக்கம். இவன் காலத்தில் சிறுசிறு பாடல்களும் அவற்றோடு நெடும் பாடல்களும் பாடப்பட்டன. சேர அரசர்கள்மீது பாடப்பட்ட பதிற்றுப்பத்து அக்காலத்தில் புதுமையானது.