282 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
பாரதப்போர் நிகழ்ந்த காலமாகிய 3500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர் என்று கருதும்படி செய்துவிட்டது. உண்மை இதுவன்று. முடிநாகராயரும் உதியன் சேரலாதனும் கடைச்சங்ககாலத்தில், (கி.மு.300-க்கும் கி. பி. 200-க்கும் இடைப்பட்ட காலத்தில்) இருந்தவர் என்பதே பொருந்துவதாகும். நிற்க, பெருஞ்சோற்று உதியன் சேரலாதனைப்பாடிய புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் என்று கூறப்படுகிறார். இப்பெயரும் தவறு என்று தோன்றுகின்றது. ராயர் என்னும் பெயர் மிக மிகப் பிற்காலத்து. இப்பெயர் கடைச் சங்ககாலத்தில் வழங்கப் பெறவில்லை. இப்பெயரில் ஏதோ பாடபேதம் இருக்கவேண்டும். இப் பெயரின் சரியான வாசகம் முரஞ்சியூர் முடிநாகரியார் என்றிருக்கக்கூடும். புறநானூற்றின் 360-ஆம் செய்யுளைப் பாடிய புலவர் பெயர் சங்கவருணர் என்னும் நாகரியர் என்று காணப்படுகிறது. எனவே, முரஞ்சியூர் முடிநாகரியர் என்னும் பெயரை ஏடு எழுதுவோர் கைப்பிழையாக முரஞ்சியூர் முடிநாகராயர் என்று எழுதிவிட்டனர்போலும். இறையனார் அகப்பொருள் உரையிலும் இப்பெயர் முடிநாகராயர் என்று காணப்படுகிறது. இதுவும் முடிநாகரியர் என்றிருக்கவேண்டும். இப் புறநானூற்றுச் செய்யுளிலே பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் வானவரம்பன் என்று கூறப்படுகிறான். சேர அரசர் சிலருக்கு வானவரம்பன் என்னும் சிறப்புப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. வேறு சில சேர அரசர்களுக்கு இமயவரம்பன் என்னும் சிறப்புப் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. வானவரம்பன், இமயவரம்பன் என்னும் பெயரைக்கொண்டு, வானத்தை எல்லையாக உடையவன், இமய மலையை எல்லையாக உடையவன் என்று சிலர் பொருள் கூறுகிறார்கள். இதுவும் பொருந்தாது. நில உலகத்துக்கு வானம் எப்படி எல்லையாக அமையும்? இமயமலையை எல்லையாகக் கொண்டு சேரமன்னர் எந்தக்காலத்திலும் அரசாண்டதாகத் தெரியவில்லை. ஆகவே, வானவரம்பன், இமயவரம்பன், என்பதற்கு இவ்வாறு பொருள் கூறுவது பொருந்தாது. ஆனால், இப்பெயர்கள் சேரமன்னர் பலருக்கும் வழங்கியுள்ளன. இப் பெயர்களுக்கு வேறு ஏதோ பொருள் இருக்க வேண்டும். இவற்றின் உண்மைப்பொருள் தெரிய வில்லை. அறிஞர்கள் ஆராய்ந்து கண்டறிய வேண்டும். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. |