பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்283

சேரலாதன் அளித்த பெருஞ்சோறு - 2

தமிழ்ப்பொழில் 36ஆம் துணர், 4ஆம் மலரில் “சேரலாதன் அளித்த பெருஞ்சோறு” என்னும் கட்டுரையை எழுதியிருந்தேன். புறநானூற்று 2-ஆம் செய்யுளில் கூறப்படுகின்ற பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், பாரதப் போரில் இருதரத்துச் சேனைகளுக்கும் சோறு வழங்கினான் என்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும், அவன் பாரத காலத்தில் இருந்தவன் அல்லன் என்றும் கடைச்சங்க காலத்தில் இருந்தவன் என்றும் அக்கட்டுரையில் நான் எழுதியிருந்தேன்.

அக்கட்டுரையில் நான் கூறியவற்றை மறுத்து எனது மதிப்புக் குரிய நண்பர் திரு. ஞா . தேவநேயப் பாவாணர் அவர்கள் “சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப்படைகட்கே என்னும் தலைப்புடைய கட்டுரையைத் தமிழ்ப் பொழிலில் (துணர் 36 - மலர் 7) எழுதி யுள்ளார்கள். தமிழின் முது பழந்தொன்மையைக் காட்டி நிற்கும் சான்றுகளில், சேரலாதன் பாரதப் படைக்குப் பெருஞ்சோறு கொடுத்த செய்தியும் ஒன்று என்றும், அதனைக் கடைச் சங்க காலத்துச் செய்தி என்று எனது கட்டுரையில் கூறியது நான் தமிழன்னைக்குப் பெரியதோர் குற்றம்செய்துவிட்டதாகவும் பாவாணர் அவர்கள் எழுதியுள்ளார்கள். உதியன் சேரலாதன் பாரதப்போர் நிகழ்ந்த காலத்தில் பாண்டவர் - கௌரவர் ஆகிய இருதரத்து படைகளுக்குச் சோறு வழங்கினான் என்பது உண்மையானால் அது தமிழுக்குப் பெருமையளிக்கும் செய்தி என்பதில் ஐயமில்லை. அதற்காக, தேவநேயரைப் போலவே நாமும் மகிழலாம்; பெருமைப்படலாம். ஆனால், அது உண்மைச் செய்திதானா என்பதை முதலில் அறியவேண்டும்.

ஐயத்துக் கிடமானதும் மயங்கச் செய்கிறதுமான சான்றுகளைக் காட்டித் தமிழன்னையின் புகழைப் பாடுவதைவிட அசைக்க முடியாத உறுதியான உண்மைக் காரணங்களைக் காட்டித் தமிழ்த்தாயின் பெருமையை நிலைநாட்டுவது சிறந்த தொண்டு என்று கருதுகிறவன் நான். காய்தல் உவத்தல் அகற்றி நடுநிலையில் நின்று ஆராயும் பழக்கம் உடைய நான், பிறர் கூறுவதில் உண்மைச் சான்றுகள் இருக்குமானால் அவற்றை ஏற்றுக் கொள்ளத் தயங்கமாட்டேன். தேவநேயர் அவர்கள், தமது கட்டுரையில் கூறியவற்றைப் படித்துப் பார்த்தேன். என்னுடைய கருத்துக்களை மாற்றிக் கொள்ளக்கூடிய செய்திகளோ சான்றுகளோ அவருடைய கட்டுரையில் கூறப்படவில்லை. மாறாகப் புதிய ஐயங்கள் தோன்றுகின்றன.