பக்கம் எண் :

286மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

நிலைக்கு இரங்கி வந்து, அவனுடன் சரிசமானமாக ஒருங்கிருந்து தன் கையினால் அவனுக்கு உணவைக் கொடுத்துத் தானும் அமர்ந் துண்ணும் “பெருஞ்சோற்றுநிலை” இருதரப்பிலும் பெருமிதத்துக் குரியது. பெருஞ்சோறு என்றால் வயிறு நிறைய உண்டு பசிபோக்குவது அல்ல. பெருதற்கரிய, பெருமை தருகிற சோறு. அதனால்தான் இது பெருஞ்சோறு என்று பெயர் பெற்றது. ஓர் உருண்டை சோறா அது! பண்டைத் தமிழரசரும் போர்வீரரும் பெருமைக்குரியதாகக் கருதிப் போற்றியபடியினாலேதான் பழந்தமிழர் மரபைக் கூறிய தொல்காப்பியனார் தமது தொல்காப்பியச் சூத்திரத்தில் பெருஞ்சோற்று நிலையை விதந்தோதினார். வயிற்றுப் பசியைத் தீர்க்கும் ஓர் உருண்டை சோறு என்றால், அதனைத் தொல்காப்பியரும் பண்டைத் தமிழரும் போற்றிப் புகழவேண்டியதில்லையே. சாதாரண சோற்று ருண்டையாக இருந்தால், அதனைப் புலவர்கள் சிறப்பித்துப் பாடி யிருக்கமாட்டார்கள். மேலே காட்டப்பட்ட மேற்கோள்களில் அரசர்கள் அளித்த பெருஞ்சோற்றைப் புலவர்கள் புகழ்ந்திருப்பதைக் காண்கிறோம். எனவே பாரதப் போரில் படைஞருக்குக் கொடுத்த சோறுதான் பெருஞ்சோறு என்றும், மற்றப் போர் வீரர்களுக்கு அரசர் கொடுத்த சோறு ஒருருண்டைச் சோறு என்றும் கருதுவது சரியல்ல. நிற்க.

3. ராயர், வானவரம்பன், இமயவரம்பன் என்பனபற்றியும் தேவநேயர் தமது கருத்தைக் கூறியுள்ளார். அவையும் ஏற்கத் தகுந்தன வல்ல. இதுபற்றித் தனியே வேறு கட்டுரை எழுதியிருக்கிறேன். இனி, உதியன் சேரலாதன் பெருஞ்சோறு அளித்தது தன்னுடைய படைஞருக்கா, அல்லது பாரதப் போர் செய்த படைஞருக்கா என்பதை ஆராய்வோம்.

பாரதப் போரில் சேரன் ஒருவன் சோறு கொடுத்ததைக் கூறுவதாகக் கருதப்படுகிற செய்யுள்கள் இரண்டு உள்ளன. அவை புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் வந்துள்ளவை. இச்செய்யுள்
கள் பாரதப் போரை வெளிப்படையாகச் சொல்லவில்லை ஐவர், ஈரைம்பதின்மர் செய்தபோர் என்று மட்டும் சொல்கின்றன. ஐவர் என்பது பாண்டவரையும், ஈரைம்பதின்மர் என்பது கௌரவர் நூற்றுவரையும் குறிக்கின்றன என்று பொருள்கொண்டு, இது பாரதப்போரைக் குறிக்கின்றது என்று பொதுவாகக் கருதுவர். அச் செய்யுள்கள் இவை.