பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்297

தோடு வாணிகம் செய்த யவனர் (கிரேக்கரும் உரோமரும்) குடகடலை எரித்திரையக் கடல் (செங்கடல்) என்று கூறினார்கள்.1

கடலைக் கிழக்கு எல்லையாகவும், கோட்டைக்கரையை மேற்கு எல்லையாகவும், வெள்ளாற்றைத் தெற்கு எல்லையாகவும், ஏணாட்டை வடக்கு எல்லையாகவும் கொண்டு 24 காதம் விரிந்து கிடந்தது சோழநாடு என்று பழம் பாடல் ஒன்று தெரிவிக்கிறது.2

இவற்றுள் வெள்ளாறு3 என்பது இப்போது புதுக்கோட்டைப் பகுதியில் பாயும் ஆறு. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொடும் பாளூர், சோழ நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் எல்லையில் அமைந் திருந்தது என்று கூறப்படும் கருத்தும் இதனோடு தொடர்புடையது.

கோட்டக்கரை (பேட்டைவாய்த்தலை?). ஏணாடு ஆகியவை
பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. மேலும், இந்த எல்லையைக் கூறும் பாடல் சங்க காலத்திற்குப் பிந்தியது. எனவே, சங்ககாலச் சோழநாட்டின் எல்லை இது என்று அறுதியிட்டுக் கூறுவதற்குப் போதிய சான்று இல்லை. எனினும் இப்போதுள்ள குளித்தலை வட்டம்வரை சங்ககாலச் சோழநாடு மேற்கில் பரவியிருந்தது என்று கொள்ள இடமுண்டு.4 வடக்கில் இதன் எல்லை சங்ககாலத்தில் காவிரி ஆற்றுச் சமவெளியைத் தாண்டிச் செல்லவில்லை என்றே எண்ணவேண்டி யுள்ளது. (தென்) பொண்ணையாறு அருவா நாட்டின் தெற்கு எல்லை என்று கூறப்படும் கருத்தும் இதனோடு தொடர்புடையதாக அமைந்துள்ளது.

காவிரியாறு

சோழநாட்டின் முக்கிய ஆறு காவிரி ஆகும். காவிரியாற்றின் நீர்வளத்தினால் சோழநாடு செழிப்பும் செல்வமும் பெற்று விளங்கிற்று.


2. ‘கடல் கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு

குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில்

ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்

சோணாட்டுக் கெல்லையெனச் சொல்’ - பழம்பாடல்

3. புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலைக்கு மேற்கில் தொடங்கி அறந்தாங்கிக்குத் தென்மேற்குப் பகுதியில் ஓடி, மணல்மேல்குடி என்னும் ஊருக்கு வடபால் கடலில் கலக்கிறது.

4. இப்போதுள்ள தான்தோன்றி மலைப்பகுதி சங்ககாலத்தில் ‘தாமான் தோன்றிக்கோன்’ என்னும் அரசனால் ஆளப்பட்டது. அவன் காலத்தில் கிள்ளிவளவன் என்னும் சோழ அரசனும் ஆண்டான். (புறம். 399). இந்த நிலை மேற்கண்ட உய்த்துணர்வுக்கு இடமளிக்கிறது.