பக்கம் எண் :

298மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1

நெல்லும், கரும்பும், மற்றும் காய்கறித் தோட்டங்களும், தெங்கஞ் சோலைகளும், கமுகஞ் சோலைகளும் சோழ நாட்டில் செழித்திருந்தன. இதற்கு முதல் காரணமாக இருந்தது காவிரி ஆறேயாகும். ‘சோழ நாடு சோறுடைத்து’ என்னும் பழமொழியை நிலைபெறச் செய்தது காவிரி ஆறே. காவிரி ஆற்றுக்குப் ‘பொன்னி’ என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.

காவிரி ஆறு கடலில் கலக்கிற இடத்தில் உலகப் பகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினம் (புகார்) என்னும் துறைமுக நகரம் இருந்தது.

உறையூர் (உறந்தை)

சோழநாட்டின் தலைநகரம் உறையூர் என்றும், உறந்தை என்றும் வழங்கப்பட்டது. இது உள்நாட்டில் காவிரி ஆற்றின் தென்கரையில் இருந்தது. உறையூர், கோட்டைமதில் சூழ்ந்த நகரம். இந்த மதிலுக்கு வெளியே ஆழமான அகழியும், அகழியைச் சூழ்ந்து மிளைக்காடும் இருந்தன. உறையூருக்குக் ‘கோழி’ என்றும் ஒரு பெயர் உண்டு. உறையூர்க் கோட்டைக்குள்ளே சோழ அரசனுடைய அரண்மனை இருந்தது. உறையூர்த் தெருக்களில் ஒன்றன் பெயர் ஏணிச்சேரி (சேரி - தெரு), முடமோசியார் என்னும் புலவர் அந்தத் தெருவில் வாழ்ந்திருந்தார். உறையூருக்கு எதிர்க்கரையில் (திருவரங்கம்) இருந்தது. உறை யூருக்குக் கிழக்கே திருச்சிராப்பள்ளி மலை இருந்தது.5 தாலமி6 என்னும் யவனர் ஓர்தொவுர7 என்று குறிப்பிடுவது இந்த உறையூர்தான். ஓர் தொவுர சோர் நகரின் (சோழ நகரின்) தலைநகரம் என்று தாலமி கூறுவது சிந்திக்கத்தக்கது. சோழர், நாகர் இனத்தைச் சேர்ந்தவர் என்று அவர் கருதுகின்றார். உறையூரை உரகபுரம் என்று வடமொழியாளர் கூறியுள்ளனர்.

காவிரிப்பூம்பட்டினம்

காவிரியாறு கடலில் புகுமிடத்தில் வடகரையின்மேல் காவிரிப் பூம்பட்டினம் இருந்தது. உலகப் புகழ்பெற்றிருந்த இப் பட்டினம், புகார் என்றும் பெயர் பெற்றிருந்தது. இதனைப் பௌத்த நூல்கள் கவீரப்பட்டினம் என்று கூறுகின்றன. இது பட்டினப்பாக்கம், மருவூர்ப் பாக்கம் என்று இரண்டு பிரிவாக இருந்தது. மருவூர்ப் பாக்கம்


5. ‘உறந்தைக் குணாது நெடும்பெருங் குன்றம்’. (அகம். 4 : 14 - 15)

6. Ptolemy

7. Ortheura