300 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
சூழ்ந்து அகழி (கிடங்கு) இருந்தது. அகழியில் நீலப்பூக்கள் மலர்ந்திருந்தன.13 குடந்தைக்கு அருகில் இருந்த குடவாயில் என்னும் ஊரில் குடவாயில் கீரத்தனார் என்னும் புலவர் வாழ்ந்தார். குடவாயிலில் சோழர் சிறைச்சாலை அமைத்திருந்தனர் எனத் தெரிகிறது.14 ஆர்க்காடு ஆர்க்காடு என்னும் பெயர் ஆத்தி மரத்தினால் வந்த பெயர். ‘ஆர்’ என்றால் ஆத்தி மரம், அத்திப்பூமாலையைச் சோழர் அணிந்தனர். பழங்காலத்தில் மரங்களின் பெயரையே ஊர்ப் பெயராக வைத்தனர். ஆலங்காடு, வேற்காடு, கடம்பங்காடு என்பனபோல ஆர்க்காடு என்பதும் மரங்களினால் வந்த பெயர். சோழநாட்டில் ஆர்க்காட்டுக் கூற்றம் என்னும் பிரிவு சங்க காலத்திலும் பிற்காலத்திலும் இருந்தது. ஆர்க்காட்டுக் கூற்றத்தின் தலை நகரம் ஆர்க்காடு. ஆர்க்காடு நகரம் சங்ககாலத்தில் பெரிய நகரமாக இருந்தது.15 அழிசி என்னும் சோழன் ஆர்க்காட்டில் இருந்தான்.16 ‘தாலமி’ என்னும் யவனர் சோரையரின் (சோழரின்) தலைநகரம் அர் கொடஸ்17 என்று கூறுவது இந்த ஆர்க்காட்டையே. இந்தச் சோழநாட்டு ஆர்க்காடு18 தொண்டைநாட்டு ஆர்க்காடு அன்று, இது வேறு; அது வேறு, சோழ அரசனை உள்ளிட்ட எழுவரைப் பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்னுமிடத்தில் வென்றான் என்பது வரலாறு. இந்த ஆலங்கானம் சோழநாட்டு ஊர் என்று நம்பப்படுகிறது. பிடவூர் சோழநாட்டில் இருந்த இவ்வூர் உறையூருக்குக் கிழக்கில் இருந்தது. இங்கு இருந்த வேள் அரசர் பிடவூர்கிழார் என்று பெயர் பெற்றிருந்தனர். பிடவூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பவனை நக்கீரர் பாடியுள்ளார்.19
13. நற். 379 : 7 - 9 14. அந்தச் சிறைச்சாலைக்குக் குடவாயில் கோட்டம் என்று பெயர். சோழன் செங்கணான். சேரமான் கணைக்கால் இரும்பொறையைப் போரில் சிறைப்பிடித்துக் கொண்டு வந்து குடவாயில் சிறையில் அடைத்துவைத்தான் என்று கூறப்படுவது இந்தச் சிறைச்சாலை போலும். 15. நற். 227 : 5 - 6 18. Arkatos 16. குறுந். 258 : 7; நற். 190 : 4 : 6 19. புறம். 395 17. Sorai |